கேள்வி கேட்டதால் ஆத்திரம்; திமுக நிர்வாகியை தாக்கிய சீமான்: விருத்தாசலத்தில் பரபரப்பு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் திமுக பிரமுகரை சீமான், அவரது ஆதரவாளர்கள் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடந்த தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க கோரிக்கை மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். கூட்டம் முடிந்ததும் காரில் புறப்பட்டு வெளியேறினார். அப்போது, கூட்டம் நடந்த மண்டபத்தின் அருகே திமுக கடலூர் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி மாவட்ட அமைப்பாளருமான ரங்கநாதன் என்பவர், சீமானின் காரின் அருகில் சென்று, ‘திமுக ஆட்சியில் என்ன குறை கண்டீர்கள், ஏன் அப்படி தாக்கி பேசினீர்கள்’ என்று கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த நாதக நிர்வாகிகள் அவரை, ‘எங்கள் தலைவருடன் உனக்கு என்ன பேச்சு’ எனக் கேட்டு தள்ளிவிட்டு, சரமாரியாக தாக்கியுள்ளனர். இதை பார்த்த சீமானும் காரை விட்டு இறங்கி வந்து கட்சியினரோடு சேர்ந்து ரங்கநாதனை தாக்கியதாக கூறப்படுகிறது. உடனே அங்கிருந்த போலீசார் ஓடிவந்து தடுத்தனர். பின்னர், காயமடைந்த ரங்கநாதனை போலீசார் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் சீமானை ரங்கநாதன் திட்டியதாகவும், அவரை தாக்குவதற்கு ரங்கநாதன் வந்ததாகவும், இதனால் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாதகவினர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பொன்னேரி- சித்தலூர் பைபாஸ் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தபின்பும், அங்கிருந்து காவல் நிலையம் வரை நடைபயணமாக கோஷமிட்டபடி சென்று விருத்தாசலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதேபோல், சீமான் தன்னை தாக்கியதாக ரங்கதானும் போலீசில் புகார் அளித்தார். இருதரப்பின் புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: