வல்லம்: தஞ்சை விளையாட்டு விடுதியில் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி, 9ம் வகுப்பு மாணவனை கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்ட 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் அரசு அன்னை சத்யா விளையாட்டு அரங்கம் உள்ளது. இங்கு விளையாட்டில் பயிற்சி பெறும் மாணவர்களுக்காக விடுதி செயல்பட்டு வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் தங்கி விளையாட்டு பயிற்சி மேற்கொண்டு அருகில் உள்ள அரசு பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் விடுதியில் தங்கியிருக்கும் 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவனை, பிளஸ் 2 படிக்கும் 2 மாணவர்கள் மற்றும் 10வது, 9வது வகுப்பு படிக்கும் மாணவர்கள் என 4 பேர் சேர்ந்து கடந்த சில மாதங்களாக கட்டாயப்படுத்தி ஓரினசேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் சிகரெட் பிடிக்கும்படி துன்புறுத்தி உள்ளனர். மாணவர்களின் டார்ச்சர் அதிகரித்ததால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவன், தனது பெற்றோரிடம் கூறினார்.
இதுகுறித்து கடந்த மாதம் 30ம்தேதி மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டிடம் மாணவனின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்பேரில் விசாரணை நடத்தி மாணவனை துன்புறுத்திய 4 மாணவர்களும் விடுதியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவன் அளித்த தகவலின்பேரில் தஞ்சை அனைத்து மகளிர் போலீசில் குழந்தைகள் உதவி மைய அலுவலர் தியாகராஜன் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் 4 மாணவர்களையும் அழைத்து போலீசார் விசாரித்து, போக்சோவில் கைது செய்து திருச்சி சிறார் சீர்திருத்த பள்ளியில் நேற்று முன்தினம் இரவு அடைத்தனர்.
