ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய 50 பசுமாடுகள் அதிரடியாக மீட்பு: கோசாலையில் ஒப்படைப்பு

செங்கல்பட்டு: ஆந்திராவிலிருந்து பொள்ளாச்சிக்கு கன்டெய்னர் லாரியில் கடத்திய 50 பசுமாடுகளை போலீசார் அதிரடியாக மீட்டு கோசாலையில் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து செங்கல்பட்டு மார்க்கமாக ஒரு கன்டெய்னர் லாரியில் பசுமாடுகள் கடத்தி செல்வதாக சென்னை ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன அடிப்படையில் செங்கல்பட்டு பகுதியில் காத்திருந்த ப்ளூகிராஸ் அமைப்பினர் அந்த கன்டெய்னர் லாரியை பின் தொடர்ந்து சென்று பரனூர் சுங்கச்சாவடியில் மடக்கிப் பிடித்தனர். மேலும், செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விரைந்து வந்த தாலுகா போலீசார் கன்டெய்னர் லாரியை திறந்து சோதனை செய்தனர். அப்போது, கன்டெய்னர் உள்ளே 50 பசுமாடுகள் இருந்தன.

இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் பசுமாடுகளுடன் கன்டெய்னர் லாரி பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு சென்றனர். இதுகுறித்து புளூகிராஸ் அமைப்பினர் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், பொள்ளாச்சியை சேர்ந்த ஸ்டான்லி(48) என்பதும், ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டை மாட்டுச் சந்தையில் இருந்து பசுமாடுகளை விலைக்கு வாங்கி கன்டெய்னர் லாரியில் அடைத்து பொள்ளாச்சி சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக மாடுகளை கடத்திய ஸ்டான்லியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும், பறிமுதல் செய்யப்பட்ட பசுமாடுகளை செங்கல்பட்டு அடுத்த கூனம்பட்டற பகுதியில் உள்ள கோசாலையில் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் நாயுடுபேட்டையில் இருந்து பொள்ளாச்சிக்கு 450 கி.மீ தூரம் உள்ள நிலையில், பசுமாடுகளை திறந்தவெளி லாரியில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில், காற்றோட்டம் இல்லாத கன்டெய்னர் லாரியில் மாடுகளை அடைத்து வைத்து தண்ணீர், தீவணம் எதுவும் இல்லாமல் கொடுமைபடுத்த கொண்டு சென்றதால் 4 மாடுகள் உடல்நிலை பாதித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: