நடிகை பலாத்கார வழக்கில் 6 பேருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறை: எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகையை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த வழக்கில் 6 பேருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதித்து எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் பிரபல மலையாள நடிகை சினிமா படப்பிடிப்புக்காக திருச்சூரிலிருந்து காரில் எர்ணாகுளத்திற்கு செல்லும் வழியில் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தக் கும்பல் பலாத்கார காட்சிகளை செல்போனில் வீடியோவும் எடுத்தது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நடிகையின் முன்னாள் கார் டிரைவரான பல்சர் சுனில்குமார், சம்பவம் நடந்தபோது நடிகையின் கார் டிரைவராக இருந்த மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம், பிரதீப் குமார், நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில்குமார் மற்றும் சரத் ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

நடிகர் திலீப் மீது சதித்திட்டம் தீட்டியது மற்றும் ஆதாரங்களை அழித்தது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 8ம் தேதி எர்ணாகுளம் முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் முதல் 6 பேர் குற்றவாளிகள் என்று உத்தரவிட்ட நீதிமன்றம், நடிகர் திலீப், சார்லி தாமஸ், சனில்குமார் மற்றும் சரத் ஆகிய 4 பேரை வழக்கிலிருந்து விடுவித்தது. குற்றவாளிகளுக்கான தண்டனை விவரங்கள் 12ம் தேதி (நேற்று) வழங்கப்படும் என்று நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று மாலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் பல்சர் சுனில்குமார், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் குமார் ஆகியோருக்கு 20 வருடம் கடுங்காவல் சிறையும், அபராதமும் விதிக்கப்பட்டது.

பல்சர் சுனில்குமாருக்கு ரூ. 3.25 லட்சமும், மார்ட்டின் ஆண்டனிக்கு ரூ. 1.50 லட்சமும், மணிகண்டன் உள்பட 4 பேருக்கும் தலா ரூ. 1.25 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையிலிருந்து பாதிக்கப்பட்ட நடிகைக்கு ரூ. 5 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட நடிகையின் திருமண நிச்சயதார்த்த மோதிரத்தை அவரிடம் திரும்ப கொடுக்க வேண்டும் என்றும், சம்பவம் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் செல்போனை போலீஸ் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், குற்றவாளிகளுக்கு மிகவும் குறைந்தபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் தீர்ப்புக்கு எதிராக மேல்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய அரசிடம் சிபாரிசு செய்யப்படும் என்றும் அரசுத்தரப்பு வழக்கறிஞர் அஜகுமார் கூறினார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள ததகவல்களின் அடிப்படையில் மேல்முறையீடு செய்வது குறித்து பின்னர் தீர்மானிக்கப்படும் என்று அமைச்சர்கள் ராஜீவ் மற்றும் சஜி செரியன் ஆகியோர் கூறினர்.

Related Stories: