கோவை: கொலை, கொள்ளை, பலாத்காரம் உட்பட 70க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய பிரபல கொள்ளையனை திருச்சியில் கோவை போலீசார் சுட்டு பிடித்தனர். கோவை போத்தனூர் அடுத்த வெள்ளலூர் இந்திரா நகர் மேகரலி வீதியை சேர்ந்தவர் ஞானபிரகாஷம் (36). இவர் அவிநாசி ரோட்டில் உள்ள அரசு கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த அக்டோபர் 18ம் தேதி ஞானபிரகாஷம் குடும்பத்துடன், திண்டுக்கல்லில் உள்ள தனது பெற்றோரை பார்க்க சென்றார். பின்னர் 21ம் தேதி வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு வெவ்வேறு அறைகளில் பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.
புகாரின்படி, போத்தனூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை கைப்பற்றினர். மேலும், வீடு மற்றும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா கட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையில் ஈடுபட்டது திண்டுக்கல் மாவட்டம் பெரியகடை வீதி பகவதி அம்மன் கோயில் வீதியை சேர்ந்த ராஜசேகர் (32) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கவுண்டம்பாளையம் பகுதியில் நடந்த திருட்டு வழக்கிலும் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளையனை பிடிக்க கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் ராஜசேகர் திருச்சியில் பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து தனிப்படை போலீஸ் எஸ்ஐ பாஸ்கர் மற்றும் 4 போலீசார் திருச்சி விரைந்து சென்றனர்.
அங்கு பல்வேறு இடங்களில் ராஜசேகரை தேடி வந்தனர். அப்போது அவர் எடமலைப்பட்டி புதூர், சீனிவாச நகரில் ஒரு வீட்டில் பதுங்கிருந்து தெரிந்தது. போலீசார் நேற்று காலை 11 மணியளவில் அங்கு சென்று அவரை பிடிக்க முயற்சி செய்தனர். போலீசாரை பார்த்ததும் ராஜசேகர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து எஸ்ஐ பாஸ்கர் மற்றும் முதுநிலை காவலர் கண்ணன் ஆகியோரை வெட்டி தப்ப முயன்றார். இதனால் போலீசார் தற்காப்பிற்காக ராஜசேகரை இடது காலில் துப்பாக்கியால் சுட்டு மடக்கி பிடித்தனர். இதையடுத்து பலத்த காயம் அடைந்த எஸ்ஐ பாஸ்கர், முதுநிலை காவலர் கண்ணன் மற்றும் கொள்ளையன் ராஜசேகர் ஆகியோரை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்கு பின்னர் கோவை திரும்ப உள்ளனர். இதற்கிடையே கொள்ளையன் ராஜசேகர் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொள்ளையன் ராஜசேகர் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று பெரிய அளவில் கொள்ளை அடித்துவிட்டு அடுத்த மாவட்டத்திற்கு தப்பி சென்று விடுவது வாடிக்கை. கோவையில் போத்தனூர் மற்றும் கவுண்டம்பாளையம் பகுதியில் கொள்ளையடித்துள்ளார். அங்கு பெரியளவில் எதுவும் கிடைக்காததால் வெள்ளலூர் பகுதிக்கு சென்று பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளார். கோவையில் போத்தனூரில் ஒரு வழக்கு, கவுண்டம்பாளையத்தில் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கொள்ளையனை தேடி வந்தோம்.
மற்ற மாவட்டங்களில் கொள்ளையனின் விவரங்களை சேகரித்த போது அவர் மீது கொலை வழக்கு, போக்சோ வழக்கு, திருட்டு வழக்கு, கற்பழிப்பு வழக்குகள் என 70க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. ராஜசேகர் கொள்ளையடிக்க செல்லும் இடங்களில் யாராவது இருந்தால் அவர்களை தாக்கியோ, கொலை செய்தோ தப்பி விடுவார். வீடுகளில் பெண்கள் இருந்தால் அவர்களுக்கு பாலியல் தொல்லையும் கொடுத்து தப்பி உள்ளார். யார் பிடியிலும் சிக்காத ராஜசேகரை கோவை போலீசார் சாதூரியமாக மடக்கி பிடித்துள்ளனர். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.
* சிக்கியது எப்படி?
திருச்சியில் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல கொள்ளையன் ராஜசேகர் திண்டுக்கல் வடக்கு நகர காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளியாக உள்ளான். கடந்த 2018ல் சிவகங்கை மாவட்டம் செட்டிநாடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் பெண் ஒருவரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளான். இதைப்போல், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியிலும் கடந்த 2024ம் ஆண்டு திருட்டில் ஈடுபட்டு உள்ளான். சிறிது நேரம் செல்போனை பயன்படுத்துவதும், பின்னர் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுவதும் ராஜசேகரின் வழக்கம். மேலும், அடிக்கடி செல்போன் எண்ணையும் மாற்றி வந்துள்ளான்.
* திருச்சியில் அடைக்கலம்
கொள்ளையன் ராஜசேகருக்கு திருச்சியை சேர்ந்த முக்கிய நபர் ஒருவர் அடைக்கலம் கொடுத்து வந்துள்ளார். அந்த நபரிடம் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் ராஜசேகரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
