அதிகரட்டி சுற்றுப்புற பகுதிகளில் ஒற்றை யானை நடமாட்டம்: வனத்துறை கண்காணிப்பு

மஞ்சூர் : அதிகரட்டி சுற்றுபுற பகுதிகளில் ஒற்றை காட்டு யானை நடமாடுவதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகம் அதிகரட்டி பிரிவுக்குட்பட்ட பரஞ்சோதி காப்புகாடு தரிகெடா பகுதியில் கடந்த சில தினங்களாக ஒற்றை காட்டுயானை முகாமிட்டுள்ளது.

இந்த யானை பரஞ்சோதி, கிளிஞ்சாடா, கக்காச்சி, கெந்தளா, மகாராஜா, சன்னிசைடு, கோடேரி, குன்னக்கொம்பை, அல்லாடா, கிரேக்மோர் எஸ்டேட், சட்டன் எஸ்டேட் ஆகிய பகுதிகளில் சுற்றி வருவதுடன் இப்பகுதிகளில் உள்ள விவசாய விளை நிலங்களில் புகுந்து பயிர்செடிகளை நாசம் செய்து வருகிறது.

மேலும், பகல் நேரங்களில் தேயிலை தோட்டங்களில் உலா வருவதால் தோட்டப்பணிகளுக்கு செல்லும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு அருகே நடமாடுவதால் இதையடுத்து பொதுமக்களும் பீதி அடைந்துள்ளனர்.

இதையடுத்து குந்தா ரேஞ்சர் செல்வகுமார் மேற்பார்வையில் வனத்துறையினர் காட்டு யானை நடமாட்டம் உள்ள இடங்களை கண்காணித்து வருவதுடன் குடியிருப்பு பகுதிகளுக்குள் யானை நுழையாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ஒற்றை காட்டு யானை நடமாட்டம் காரணமாக மேற்படி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தேயிலை மற்றும் தோட்டப்பணிகளுக்கு செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என எச்சரித்துள்ளனர்.

Related Stories: