தோடர் பழங்குடியின கிராமத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்

ஊட்டி, டிச. 12: நீலகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு சட்ட விழிப்புணர்வு முகாம் ஊட்டி அருகேயுள்ள பகல்கோடுமந்து தோடர் பழங்குடியின கிராமத்தில் நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பாலமுருகன் தலைமை வகித்தார்.

மாவட்ட முதன்மை நீதிபதி முரளிதரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசியதாவது:
இந்திய அரசியலமைப்பு நமது நாட்டின் அடிப்படை ஆவணம். இது நமது உரிமைகள், கடமைகள் மற்றும் நாட்டின் நிர்வாக கட்டமைப்பை வரையறுக்கிறது. ஒவ்வொரு குடிமக்களும் அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள், கடமைகள் மற்றும் சட்ட சேவை அதிகார சட்டத்தின் மூலம் நீதித்துறை சேவைகள் குறித்து அறிந்திருப்பது அவசியம்.
பட்டியல் சாதியினர் அல்லது பட்டியல் பழங்குடியினர், அரசியலைப்பு சட்டப்பிரிவு 23ல் குறிப்பிட்ட மனிதர்களை விற்பதும், வாங்குவதும், வற்புறுத்தி வேலை வாங்குவதால் பாதிக்கப்பட்ட நபர் அல்லது பிச்ைச எடுப்பவர்கள்.

பெண்கள், குழந்தைகள். மாற்று திறனாளிகள், பேரழிவு, இன வன்முறை, சாதி வன்கொடுமை, வெள்ளம், பஞ்சம், நில அதிர்ச்சி, தொழில் அழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள். தொழிற்சாலை தொழிலாளர்கள், சிறை காவலில் இருப்போர், பாதுகாப்பு இல்லத்தில் உள்ள இளம் குற்றவாளிகள், மனநல மருத்துவமனை, மனநோய் மருத்துவமனை மற்றும் இல்லம் இவைகளில் காவலில் உள்ளவர்கள், ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் உள்ளவர்கள் இலவச சட்ட சேவைகளை பெற தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.

இதுதவிர சிறைகளுக்கு வழக்கறிஞர்களை அனுப்பி அங்குள்ள சிறைவாசிகளுக்கு சட்ட உதவி வழங்குதல், குற்றவியல் நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களை நியமித்து கைது செய்யப்பட்டு முன்நிறுத்தப்படுவோருக்கு சட்ட உதவி வழங்குதல், மக்கள் கூடும் இடங்களில் சட்ட உதவி மையங்களை அமைத்து மக்களுக்கு சட்டம் உதவி வழங்குதலும் சட்டப்பணிகள் ஆணைக்குழு மேற்கொள்கிறது. ஒவ்வொருவரும் சட்டம் குறித்த அறிவை பெற்றிருக்க வேண்டியது அவசியம். சட்ட உதவி மற்றும் ஆலோசனைக்கு ஊட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவை நேரில் அணுகலாம். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் குடும்ப நல நீதிமன்ற மாவட்ட நீதிபதி லிங்கம், மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி சதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தோடர் பழங்குடியினத்தை சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: