ஈரோடு: சாதி மறுப்பு திருமணம் செய்த புதுப்பெண்ணை காரில் கடத்திய பெண் உள்பட 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் எண்ணமங்கலத்தைச் சேர்ந்தவர் சேதுராஜ் (25). இவரும், அந்தியூர் மேல் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த அவர்கள், கடந்த 5ம் தேதி, காதல் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு, ஈரோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
இந்த திருமணத்தை மகாலட்சுமியின் பெற்றோர் ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த 9ம் தேதி, சேதுராஜும், மகாலட்சுமியும், பெருந்துறையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்தனர். இதனை அறிந்த மகாலட்சுமியின் சகோதரி கௌசல்யா உறவினர்களுடன் பெருந்துறைக்கு வந்து பஸ் ஸ்டாண்டிற்கு வருமாறு போன் செய்துள்ளார். இதனால், சேதுராஜும், மகாலட்சுமியும் பெருந்துறை பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். அப்போது, கௌசல்யா மற்றும் அவரது உறவினர்கள், மகாலட்சுமியை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து சேதுராஜ் அளித்த புகாரின் பேரில், பெருந்துறை போலீசார் விசாரித்தனர். இதில், சத்தியமங்கலம் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த லோகேஷ்வரன் என்பவரது வீட்டில் மகாலட்சுமியை கடத்தி வைத்திருப்பது தெரியவந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் சத்தியமங்கலம் சென்ற போலீசார் மகாலட்சுமியை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்தி சென்ற, கோத்தகிரியைச் சேர்ந்த அவரது சகோதரி கௌசல்யா (25), அவரது கணவர் சந்தோஷ் (26), மற்றும் சாதிக் (27), லோகேஷ்வரன் (21), தனபால் (45) ஆகியோரை கைது செய்தனர்.
