டிஎஸ்பியை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்: உயர் நீதிமன்றம் நடவடிக்கை

சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி செம்மலையை பணியிடை நீக்கம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். வன்கொடுமை தடைச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி காஞ்சிபுரம் மாவட்ட டி.எஸ்.பி. சங்கர் கணேஷை கைது செய்யுமாறு காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் உத்தரவு பிறப்பித்திருந்தார். மாவட்ட நீதிபதிக்கும், அவரது பாதுகாப்பு அதிகாரியாக இருந்த லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட பிரச்னை காரணமாக டி.எஸ்.பி.யை கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகக் கூறி காவல் துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டி.எஸ்.பி. சங்கர் கணேஷை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், மாவட்ட நீதிபதிக்கு எதிராக நிர்வாக ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில், உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளர் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை சென்னை உயர் நீதிமன்ற நிர்வாக குழு மற்றும் நீதிபதிகள் பணியிட மாற்ற குழு அனுப்பினார்.

இதனை எதிர்த்து செம்மல் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு பிறகு நீதிபதி செம்மலை சஸ்பெண்ட் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.

Related Stories: