3வதும் பெண் குழந்தை என்பதால் சட்டவிரோத கருக்கலைப்பு கர்ப்பிணி பரிதாப பலி: நாடகமாடிய கணவர் உள்பட 3 பேர் கைது

பென்னாகரம்: சட்டவிரோத கருக்கலைப்பால் கர்ப்பிணி பெண் பலியான சம்பவத்தில், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஏரியூர் பூச்சூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (35). கூலி தொழிலாளியான இவரது மனைவி ரம்யா (27). இவர்களுக்கு 8 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ரம்யா மீண்டும் கர்ப்பமடைந்தார். இந்நிலையில் அவர், கடந்த 1ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக கூறி அவரது கணவர் கண்ணன் கண்ணீர் வடித்தார்.

இதனிடையே, ரம்யாவின் சாவில் சந்தேகம் உள்ளதாக கூறி, உறவினர்கள் ஏரியூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், ரம்யாவிற்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், 3வதாக பெண் குழந்தை பிறப்பதை தவிர்க்க கண்ணன் கருவில் இருக்கும் குழந்தை ஆணா-பெண்ணா என, சட்டவிரோதமாக ஸ்கேன் மூலம் பரிசோதித்துள்ளார். இதில், பெண் குழந்தை இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து, சேலம் மாவட்டம், ஓமலூர் பகுதியைச் சேர்ந்த செவிலியர் சுகன்யா(35), புரோக்கர் வனிதா(34) ஆகியோருடன் சேர்ந்து, ரம்யாவிற்கு கருக்கலைப்பு செய்துள்ளனர்.

அப்போது அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டதால், சேலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே ரம்யா உயிரிழந்தார். சட்ட விரோத கருக்கலைப்பால் ஏற்பட்ட மரணத்தை மறைக்க மாடிப்படியில் இருந்து தவறி விழுந்ததாக கண்ணன் நாடகமாடியது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணன் மற்றும் உடந்தையாக இருந்த சுகன்யா, வனிதா ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories: