போடி அருகே பயங்கரம் மனைவி, மைத்துனர் கொலை: கணவர், மாமனார் தப்பி ஓட்டம்

போடி: போடி அருகே மனைவி, மைத்துனரை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பியோடிய கணவர் மற்றும் மாமனாரை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம், போடி அருகே சின்னமனூர் ஒன்றியம் முத்தையன்செட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார் (52). இவரது மகன் பிரதீப் (27). இவருக்கும் சின்னமனூரை சேர்ந்த நிகிலா (32) என்பவருக்கும் 3 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. பிரதீப் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. வேலைக்கும் செல்லவில்லை. இதனால் பிரதீப் மற்றும் அவரது மனைவி நிகிலாவிற்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருவரும் ஒரு மாதமாக பிரிந்து வாழ்ந்தனர். உறவினர்கள் சமாதானம் பேசி கடந்த வாரம் நிகிலாவை பிரதீப்புடன் சேர்த்து வைத்துள்ளனர். ஆனால், மீண்டும் இவர்களுக்குள் பிரச்னை ஏற்படவே, நிகிலாவை பிரதீப் கடுமையாக தாக்கியுள்ளார்.

படுகாயமடைந்த நிகிலா சின்னமனூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். போடி தாலுகா போலீசிலும் நிகிலா புகார் அளித்தார். இதனை தொடர்ந்து பிரதீப்புடன் சேர்ந்து வாழ முடியாது என முடிவு செய்து, சீதனப்பொருட்களை எடுப்பதற்காக நிகிலா, அவரது அண்ணன் விவேக் (33) மற்றும் உறவினர்களுடன் முத்தையன்செட்டிபட்டியில் உள்ள பிரதீப் வீட்டிற்கு நேற்று சென்றுள்ளார். அப்போது பிரதீப்பின் தந்தை சிவக்குமார் மற்றும் பிரதீப் ஆகியோர் நிகிலாவின் குடும்பத்தினருடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். பிரதீப் கத்தியால் விவேக்கை சரமாரியாக குத்திக் கொன்றார். இதனை கண்டு மயக்கமடைந்த நிகிலாவையும் சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொன்றுள்ளார். பின்னர் அங்கிருந்து சிவக்குமாரும், பிரதீப்பும் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: