தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை வெட்டிக் கொன்ற அக்கா: பரபரப்பு வாக்குமூலம்

கடலூர்: தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை கத்தியால் வெட்டி கொன்ற அக்கா போலீசில் சரணடைந்தார். அவரது கணவர் தலைமறைவாகி விட்டார். கடலூர் பாதிரிக்குப்பம் குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பிரசாத்(40). அவரது தாயார் ராமதிலகம்(70). சுந்தரமூர்த்தி நகரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தனர். பிரசாத்துக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று மாலை பிரசாத், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தக்காயங்களுடன் வீட்டுக்குள் ஓடிவந்து தாயாரிடம் துண்டு கேட்டுள்ளார். அவர் கொடுத்ததும் அதை கழுத்தில் சுற்றினார். சிறிதுநேரத்தில் மயங்கி விழுந்தார். இதை பார்த்து தாயார் ராமதிலகம் கதறி அழுதார்.

அலறல் சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது பிரசாத் இறந்து விட்டது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கொலை சம்பவம் தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த கவிப்பிரியா(30) என்பவர் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில், கவிப்பிரியாவின் தங்கைக்கு பிரசாத் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனை அந்தப்பெண் தனது அக்காவிடம் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கவிப்பிரியா, தனது கணவர் முத்துவுடன் சேர்ந்து பிரசாத்தை கத்தியால் கழுத்தில் வெட்டி கொன்றதாக தெரியவந்துள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள கவிப்பிரியாவின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். தங்கைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பக்கத்து வீட்டு வாலிபரை அக்கா, கணவருடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் கடலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: