அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை சேர்ந்த ஜெய்சங்கர் மகன் பார்த்திபன்(30). இவருக்கு வலைதளம் மூலம் திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண் பழகினார். பின்னர் வர்த்தகம் வாயிலாக அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று ஆசைவார்த்தை கூறி ரூ.17.50 லட்சம் முதலீடு செய்யுமாறு பார்த்திபனிடம் அந்த பெண் கூறினார். இதை நம்பிய அவர் பெண்ணின் வங்கி கணக்குக்கு ரூ.17.50 லட்சத்தை அனுப்பினார். அதன்பிறகு அந்த பெண் பார்த்திபனை தொடர்பு கொள்ளவில்லை. பின்னர் தான் பெண் போன்று மர்ம நபர் நடித்து ஏமாற்றி பண மோசடி செய்தது தெரியவந்தது.
இதுகுறித்து அரியலூர் சைபர் கிரைமில் பார்த்திபன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், கன்னியாகுமரி மாவட்டம் காட்டாதுறை கல்குளத்தை சேர்ந்த முகமது அலி மகன் அசார்(36) என்பவர் தான் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அசாரை நேற்று கைது செய்ததுடன் 2 செல்போன், 3 சிம் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ஏடிஎம் கார்டு, பென் டிரைவ் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அரியலூருக்கு அசாரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
