சேலம்: இரிடியம் விற்பனை செய்தால் கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும் என ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.8 கோடி மோசடி செய்த பவானி பாமக நகர செயலாளர் உள்பட 2 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் போலியான ஆவணங்களை தயாரித்து, முறையாக பதிவு செய்யாமல் டிரஸ்ட்கள் நடத்தி, இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக ஒரு கும்பல், தமிழ்நாடு முழுவதும் மோசடியில் ஈடுபட்டது. இந்தவகையில் சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள ஆர்.சி.செட்டிப்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனம் நடத்தி வரும் லாசர் (36) என்பவர் சேலம் சிபிசிஐடி போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில், ரிசர்வ் வங்கி பெயரில் இரிடியம் விற்பனை செய்தால் பல கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி தன்னிடம் இருந்து ரூ.7 லட்சம் பணத்தை ஓமலூரை சேர்ந்த செல்லத்துரை, ஈரோடு மாவட்டம் பவானியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட 4 பேர் பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டனர். தன்னை போல் பலரிடம் அவர்கள் கோடிக்கணக்கில் ேமாசடி செய்துள்ளனர், எனக்கூறியிருந்தார்.
இப்புகார் பற்றி சேலம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி, வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இம்மோசடியில் ஈடுபட்ட பவானியை சேர்ந்த தினேஷ்குமார் (37), ஓமலூர் பல்பாக்கியை சேர்ந்த செல்லத்துரை (55) ஆகிய 2 பேரை நேற்று அதிரடியாக கைது செய்தனர். இதில், தினேஷ்குமார் பவானி பாமக நகர செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது தெரியவந்தது. கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்கள் கிடைத்தது. இவர்கள் இருவர் உள்பட 4 பேர் சேர்ந்து, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில் பலரிடம் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி, இரிடியம் விற்பனை என பண மோசடியை அரங்கேற்றியுள்ளனர். ஒட்டுமொத்தமாக ரூ.8 கோடி மோசடி செய்துள்ளது தெரியவந்தது.
கைதான தினேஷ்குமார், செல்லத்துரையிடம் இருந்து 4 செல்போன், ஒரு லேப்டாப், மோசடி ஆவணங்கள் போன்றவற்றை சிபிசிஐடி போலீசார் பறிமுதல் செய்தனர். இதனிடையே நேற்று மாலை கைதான தினேஷ்குமார், செல்லத்துரை ஆகிய 2 பேரையும் சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இவர்களின் கூட்டாளிகள் 2 பேரை சேலம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
