போராட்டத்தில் ஈடுபட்ட 2 ஆயிரம் டிட்டோஜாக் அமைப்பினர் கைது

சென்னை: தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு(டிட்டோ ஜாக்) அமைப்பின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகள் மற்றும் தொடக்க கல்வித்துறையில் நடக்கும் குளறுபடிகளை கண்டித்தும்
சென்னை புதுப்பேட்டை பகுதியில் நேற்று காலை காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இதில் ஈடுபட்ட பல்வேறு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சங்கங்களை சேர்ந்தவர்கள் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தொடக்க கல்வி அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அங்கு பாதுகாப்பில் ஈடுபட்ட போலீசார் அவர்களை கைது செய்து நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

இதுகுறித்து டிட்டோ ஜாக் அமைப்பின் மாநில உயர் மட்டக்குழுவினர் கூறியதாவது: காத்திருப்பு போராட்டத்தின் தொடர்ச்சியாக தலைமைச் செயலகத்தில் கல்வித்துறை செயலாளர் சந்தரமோகனுடன் பேரமைப்பின் சார்பில் பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்தனர். அப்போது, கடந்த ஆகஸ்ட் மாதம் பள்ளிக் கல்வித்துறையின் அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டது. அதன்மீது தமிழ்நாடு அரசின் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பும் செயலாளரிடம் வழங்கினோம். அமைச்சருடன் நடந்த பேச்சுவார்த்தையில் 4 கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டு அது தொடர்பாக அமைச்சர் தெரிவித்த விவரங்களும் தெரிவிக்கப்பட்டது.

எங்களிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு, உங்களின் கோரிக்கை தொடர்பாக இன்றே உத்தரவுகள் வெளியிடுவதற்குரிய வாய்ப்பு இல்லை என்றாலும், உங்கள் கோரிக்கை தொடர்பாக தீர்வு காண்பதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துகிறேன். மேலும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சருடன், டிட்டோஜாக் மாநில உயர் மட்டக் குழுவினர் பேசுவதற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்று தெரிவித்ததை அடுத்து பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. பேச்சுவார்த்தைக்கு பிறகு தலைமைச் செயலக சங்க அலுவலகத்தில் டிட்டோஜாக் உயர்மட்டக் குழுகூட்டம் நடந்தது. அதில் வரும் 12ம் தேதியில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒரு நாள் வேலை நிறுத்தத்துடன் கூடிய மறியல் போராட்டத்தை நடத்துவது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது தொடர்பாக 10ம் தேதி டிட்டோஜாக் கூட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: