பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் இருக்கைகள் இல்லாத பயணியர் நிழற்குடை: நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் மஞ்சங்காரணை கிராமத்தில் பயணியர் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இருக்கைகள் இன்றி காணப்படுகிறது. இதனை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என பயணிகள் எதிர்பார்த்து காத்துள்ளனர். பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை கிராமத்தில் விவசாயிகள், அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள் மாணவ – மாணவிகள் என 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.

மேலும், மஞ்சங்காரணையை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வேலை சம்மந்தமாகவும், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல மஞ்சங்காரணை பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்திற்கு வந்து அங்கிருந்து பெரியபாளையம், திருவள்ளூர், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிபூண்டி, பொன்னேரி ஆகிய பகுதிகளுக்கு பேருந்து மூலம் சென்று வருகின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகளுக்கு பேருந்து நிலையமோ அல்லது பயணியர் நிழற்குடையோ இல்லை. இதனால், பயணிகள் வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலிலோ அல்லது மழை காலங்களில் மழையிலோ நனையும் நிலை ஏற்பட்டது. இதனால், கடந்த 2016 – 2017ம் ஆண்டு ₹5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது.

ஆனால், அந்த பயணியர் நிழற்குடையில் உள்ள இரும்பு நாற்காலிகள் உடைந்து சேதம் ஏற்பட்டு அதன் தகடுகள் பயணிகளை பதம் பார்த்தது தற்போது பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு இருக்கைகள் காணவில்லை. மேலும், பயணிகள் இரும்பு கம்பிகள் மீது அமர்ந்து பயணிகள் பேருந்து ஏறி செல்கிறார்கள். மஞ்சங்காரணை பகுதியில் பயணிகளின் வசதிக்காக பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. ஆனால், அது பயன்பாடில்லாமல் உள்ளது.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிறுத்தத்தை சீரமைத்து புதிய நாற்காலிகள் அமைத்துத்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை. இனியாவது பேருந்து நிறுத்தத்தை சீரமைக்கா விட்டால் போராட்டம் நடத்துவோம் என அப்பகுதி மக்கள் கூறினர்.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: மஞ்சங்காரணை பேருந்து நிறுத்தத்திற்கு கடந்த 2017ம் ஆண்டு ₹5 லட்சம் செலவில் பயணியர் நிழற்குடை அமைக்கப்பட்டது. அதில், பயணிகள் அமருவதற்கு இரும்பாலான நாற்காலிகள் அமைக்கப்பட்டது. ஆனால், சில வருடங்கள் கழித்து இரும்பு நாற்காலிகள் சேதம் அடைந்தது. பின்னர், தற்போது இரும்பு இருக்கைகள் காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் அதை திருடிச்சென்று விட்டனர். இதனால், பயணிகள் பயணியர் நிழற்குடைகள் பேருந்து வரும் வரை அமர முடியாமல் நீண்ட நேரம் காத்திருந்து பேருந்து ஏறி செல்கிறார்கள். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் வசதிக்காக பேருந்து நிறுத்தத்தில் இருக்கைகளை பொறுத்த வேண்டும்’ என்றனர்.

Related Stories: