நரிக்குடி பகுதியில் தொடர் மழையால் விவசாய பணி விறுவிறு

திருச்சுழி : நரிக்குடி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்து வருகிறது. இப்பகுதியில் கடலை, நெல், பாசிப்பயிறு உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டு நன்கு செழித்து வளர்ந்து கண்னுக்கு குளிர்ச்சியாக காணப்படுகின்றன.

எனினும் தொடர் மழை காரணமாக பயிர்களில் நோய் தாக்குதல் ஆரம்பித்துள்ளது. இதனால் மருந்து அடிக்கும் கருவி வைத்து அடிப்பதற்கு ஆட்கள் கிடைக்கததால் தற்போது முதன் முறையாக உலக்குடி, ஆனைக்குளம், வேளானூரணி, காத்தான்பட்டி, இழுப்பையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ட்ரோன் மூலமாக வயல் வெளிகளில் மருந்து தெளிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஒரு ஏக்கருக்கு ட்ரோன் மூலம் சுமார் 10 நிமிடங்களில் மருந்து தெளிக்க முடிவதால் நேரம் அதிகளவில் மிச்சமாகிறது. வேலை ஆட்கள் மூலமாக மருந்து தெளிக்கும் போது ரூ.500 முதல் ரூ.800 வரை செலவழிக்க வேண்டி இருந்தது.

ஆனால் தற்போது அந்த செலவினம் குறைந்துள்ளது. மேலும் மருந்து தெளித்த சில நாட்களில் பயிர்களை தாக்கும் பூச்சிகள் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் வருகிறது. இதனால் இப்பகுதி விவசாயிகள் ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பதற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இவ்வாறு கூறினர்.

Related Stories: