ஆர்.எஸ்.மங்கலம் அருகே சாலையில் மண் அரிப்பு வாகனஓட்டிகள் அச்சம்

ஆர்.எஸ்.மங்கலம், ஜன.13: ஆர்.எஸ்.மங்கலம் அருகே திருச்சி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேட்டு சோழந்தூர் விலக்கில் இருந்து திருப்பாலைக்குடி செல்லும் சாலையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கொத்தியார்கோட்டை, பால்குளம், வலமானூர் விலக்கு வழியாக திருப்பாலைக்குடி செல்வதற்கு ரோடு வசதி உள்ளது. இந்த ரோட்டின் மூலம் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். மேலும் தேசிய நெடுஞ்சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த சாலையாகவும் விளங்கி வருகிறது. இந்நிலையில் இச்சாலையின் இரு ஓரங்களிலும் மழையால் மண் அரிப்பு ஏற்பட்டு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் மண் அரிப்பால் ரோடு சேதமடைந்து வருகின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகனங்கள் எதிர் வரும் வாகனங்களுக்கு வழிவிடும் போது விபத்துக்களில் சிக்கும் நிலை தொடர்கிறது. எனவே சம்மந்தபட்ட துறை அதிகாரிகள் இந்த சாலையோர பள்ளங்களை சீரமைக்க வேண்டும். சாலை சேதமடைவதை தடுத்து நிறுத்தி  பாதுகாக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வாகன ஓட்டிகள் கூறுகையில், சாலையில் ஏற்பட்டுள்ள மண் அரிப்பால் விபத்து அபாயம் நிலவுகிறது. இதனால் இரவு நேரங்களில் இந்த சாலையில் பயணிக்கவே அச்சமாக உள்ளது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்றனர்.

Related Stories: