எந்த கோர்ட்டுக்கு போனாலும் ராமதாஸ் ஜெயிக்க முடியாது: பாமக வழக்கறிஞர் பாலு சவால்

சென்னை: எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெற்றி பெற முடியாது என அன்புமணியின் பாமக வழக்கறிஞர் பாலு சவால் விடுத்துள்ளார். பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணி இடையிலான மோதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், இருவரும் பாமக‌வுக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையம் சென்றபோது, 2026ம் ஆண்டு ஆகஸ்ட் 1ம் தேதி வரை அன்புமணி தான் பாமகவின் தலைவர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

இதை எதிர்த்து ராமதாஸ் தரப்பு டெல்லி உயர்நீதிமன்றம் சென்றது. இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் ‘அங்கீகரிக்கபடாத கட்சியின் உரிமை கோரல் விவகாரத்தில் ஒரு சாரார் கருத்தை பெற்று தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியாது’ என்று கூறி ராமதாஸ் தரப்பு உரிமையியல் நீதிமன்றத்தில் நாடலாம்’ என்று உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் தங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக ராமதாஸ் தரப்பு கொண்டாடியது.

‘‘அன்புமணி தலைவர் என கூறிக்கொண்டு போலியான ஆவணங்கள் கொடுத்தது செல்லாது. அது ரத்து செய்யப்படுகிறது என்ற தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. இது ராமாதாஸுக்கும், பாமகவுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இனி அன்புமணி தலைவர் என சொல்ல முடியாது’’ என்று ராமதாஸ் ஆதரவாளர் ஜி.கே.மணி கூறியிருந்தார். இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர் வழக்கறிஞர் கே.பாலு நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ராமதாஸ் தரப்பினர் தீர்ப்பை குறிப்பிட்டு கொண்டாடுவதை பார்க்க வினோதமாகவும் , கோமாளித்தனதாகவும் உள்ளது. மாம்பழம் சின்னம் யாருக்கும் இல்லை என கூறி மகிழ்ச்சி அடைகின்றனர். இதற்குதான் 30 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தினரா? அரசியல் கட்சிகள் சிறு சிறு பிரச்சனைகளை உரிமையியல் நீதிமன்றம் மூலமே தீர்த்து கொள்ள வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளனர். சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை அங்கீகரித்து டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சிகளை எவ்வாறு கையாளுவோம் என்பது குறித்து தீர்ப்பில் தேர்தல் ஆணையம் கூறியுள்ள தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ராமதாஸ் தரப்பினர் தீர்ப்பினை கொண்டாட ஒரு முகாந்திரம் கூட இல்லை. மாம்பழம் சின்னம் பாமகவிற்கு கிடையாது என தீர்ப்பின் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. 2026 வரை அன்புமணிக்கு பாமக தலைவராக அங்கீகாரம் கொடுத்ததை தேர்தல் ஆணயம் திரும்ப பெறவில்லை.

அன்புமணிக்கு அதிகாரம் இல்லை என நிரூபிக்க வேண்டும் என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடுங்கள் என டெல்லி நீதிமன்றம் கூறியுள்ளது. முடிந்தால் உரிமையியல் நீதிமன்றம் சென்று தங்களுக்கு சாதகமாக தீர்ப்பை பெற்று ராமதாசு தரப்பினர் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கட்டும், அப்போது தேர்தல் ஆணையம் அன்புமணியின் தலைவர் பதவி குறித்து கண்டிப்பாக மறுபரிசீலனை செய்யும். ஒருபோதும் ராமதாஸ் தரப்பால் இந்த வழக்கில் வெற்றி பெற முடியாது . காரணம் சென்னை உயர்நீதிமன்ற வழக்கில் ஆத்திரத்தில் மிகப்பெரும் தவறை அவர்கள் செய்துவிட்டனர்.

சிபிஐக்கு எல்லாம் ராமதாஸ் தரப்பினர் சென்றுவிட்டனர். ஆனால் சிவில் நீதிமன்றத்திற்கு செல்ல மாட்டேன் என்கின்றனர். பாமகவை உடைக்கும் பணியை ஜி.கே. மணி செய்து வருகிறார். தைலாபுரத்தில் இருந்து ஒரு பதவியை தனது மகனுக்கு ஜி.கே.மணி மாற்றியதுதான் திருட்டு. அன்புமணி கட்சியை திருடவில்லை. இந்த வழக்கில் எந்த இடத்திலும், எந்த சூழ்நிலையிலும், எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் தரப்பு வெற்றி பெற முடியாது என்பதை நான் சவாலாக சொல்கிறேன் என்றார்.

Related Stories: