இந்தூர்: இந்தியாவில் வசிக்கும் கணவர் தன்னை ஏமாற்றிவிட்டு மறுமணம் செய்ய முயல்வதாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் பிரதமர் மோடியிடம் நீதி கேட்டுள்ளார். பாகிஸ்தானைச் சேர்ந்த நிகிதா நாக்தேவ் என்பவரும், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வரும் விக்ரம் நாக்தேவ் என்பவரும் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி மாதம் கராச்சியில் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு இந்தியா வந்த நிகிதாவை, கொரோனா ஊரடங்கு காலத்தில் ஜூலை 2020ல் விக்ரம் கட்டாயப்படுத்தி மீண்டும் பாகிஸ்தானுக்கே திருப்பி அனுப்பியுள்ளார். அதன்பின்னர் அவரை இந்தியாவுக்கு வரவிடாமல் தடுத்ததுடன், கராச்சியிலேயே தவிக்க விட்டுத் தொடர்பைத் துண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், தன்னை சட்டப்பூர்வமாக விவாகரத்து செய்யாமலேயே டெல்லியைச் சேர்ந்த வேறொரு பெண்ணை விக்ரம் திருமணம் செய்யத் திட்டமிட்டிருப்பது நிகிதாவுக்குத் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பிரதமர் மோடியிடம் நீதி கேட்டு உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதி கிடைக்க வேண்டும்; நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதித்துறை மீதான நம்பிக்கை போய்விடும்’ என்று கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக இந்தூரில் உள்ள பஞ்சாயத்து மற்றும் சட்ட ஆலோசனை மையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் விசாரணை நடத்தப்பட்டு, விக்ரமை நாடு கடத்தப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், இந்தூர் மாவட்ட ஆட்சியரும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
