மருதூர் அணையில் மூழ்கிய சிறுவனை டிரோன் கேமராவில் தேடுதல் பணி தீவிரம் கலெக்டர், எஸ்பி ஆய்வு

செய்துங்கநல்லூர், ஜன. 13: மருதூர் அணைக்கட்டில் மூழ்கிய சிறுவனை டிரோன் கேமரா மூலம் தேடும் பணியை கலெக்டர், எஸ்பி ஆய்வு மேற்கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கால் மருதூர் அணைக்கட்டு நிரம்பியது. இதை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றனர். கலியாவூரைச் சேர்ந்த தொழிலாளி சுப்பிரமணியன், தனது மகன்கள் பார்த்திபன்(8), கார்த்திக்(5) அழைத்து சென்றார். அணைக்கட்டு வழியாக சென்று அணை நிரம்பி வழிவதை பார்த்த போது எதிர்பாராத விதமாக சிறுவன் பார்த்திபன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டான். தந்தை சுப்பிரமணியன் முயன்றும் காப்பாற்ற முடியவில்லை.

தகவல்  கிடைத்த வைகுண்டம் தீயணைக்கும் படையினர் வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அணையினுள், அதிக முள்செடி இருந்ததால் தேடி முடியவில்லை. ஒரு பிரிவினர் முறப்பநாடு தடுப்பணையிலும் தேடினர். நேற்று 2வது நாளாக காலை 6 மணிக்கு வைகுண்டம் தாசிலர்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையில் டிரோன் கேமரா மூலமாக தேடுதல் பணி நடந்தது. தகவலறிந்த கலெக்டர் செந்தில்ராஜ், எஸ்பி ஜெயக்குமார் மருதூர் அணைக்கட்டுக்கு வந்து சிறுவன் உடலை தேடும் பணியை பார்வையிட்டு சுப்பிரமணியன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர்.சுப்பிரமணியன் ஏழ்மையான குடும்பத்தினை சேர்ந்தவர். அவரது குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கலியாவூர் பஞ்.தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: