தண்டராம்பட்டில் பட்டப்பகலில் பைக்கில் சென்ற தாய், மகன் முகத்தில் மிளகாய் பொடி தூவி பணம் கொள்ளை 4 பேர் முகமூடி கும்பல் அட்டூழியம்

தண்டராம்பட்டு, ஜன.12: தண்டராம்பட்டில் பைக்கில் சென்ற தாய், மகன் முகத்தில் மிளகாய் பொடி தூவிய 4 பேர் கொண்ட முகமூடி கும்பல் பணம் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை பெரிய கோபுரம் தெருவை சேர்ந்தவர் சத்யா(42). இவரது மகன் சஞ்சய்(21). இருவரும் நேற்று தண்டராம்பட்டு இ-சேவை மையத்திற்கு பைக்கில் சென்றுவிட்டு, வீடு திரும்பி கொண்டிருந்தனர். தண்டராம்பட்டு அடுத்த ராதாபுரம் காட்டுப்பகுதி வழியாக வந்தபோது, அவர்களது பைக்கை பின்தொடர்ந்து 2 பைக்குகளில் முகமூடி அணிந்தபடி 4 பேர் கொண்ட கும்பல் வந்தது. அப்போது சத்யா, சஞ்சய் ஆகிய இருவர் முகத்திலும் மிளகாய் பொடியை முகமூடி கும்பல் தூவியது. இதில் அவர்கள் நிலைதடுமாறி பைக்கிலிருந்து கீழே விழுந்தனர். பின்னர், சத்யா வைத்திருந்த பணப்பையை பறித்துக் கொண்டு முகமூடி கும்பல் தப்பியது. அந்த பையில் மொத்தம் ₹6,000 இருந்துள்ளது. இதுகுறித்து சத்யா தண்டராம்பட்டு போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மூகமுடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் மிளகாய் பொடி தூவி முகமூடி கும்பல் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், மக்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>