பாடாலூர், டிச.3: அல்லிநகரம் ரவுண்டானா பகுதியில் நின்ற லாரி மீது அரசு பஸ்மோதி 4 பேர் காயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரியலூரில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அந்த பஸ் பெரம்பலூர் மாவட்டம் எசனை அஞ்சாம் நகர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து மகன் பிரபு (52 ) என்பவர் ஓட்டி சென்றார். பெரம்பலூர் அருணாச்சல கவுண்டர் தெருவை சேர்ந்த மோகன்ராஜ் நடத்துனராக இருந்தார். இந்த பஸ்ஸில் பயணிகள் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பிய அரசு பஸ் நடத்துனர்களான பெரம்பலூர் அரணாரை திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அசோக் ரத்தினம் (52), ரஜினி காந்த்( 25 ) ஆகியோர் பயணம் செய்தனர். நேற்று காலை பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அல்லிநகரம் ரவுண்டானா பகுதியில் சென்றபோது, ஓட்டல் முன்பு நிறுத்தி வைத்திருந்த லாரியின் பின்னால் பஸ் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சை ஓட்டி வந்த பிரபு, நடத்துனர் மோகன்ராஜ், மற்றும் பணி முடிந்து வீடு திரும்பிய நடத்துனர் ரஜினிகாந்த், லாரி டிரைவர் சேலம் மாவட்டம் தெடாவூர் கார்த்திக் (32) ஆகிய 4 பேரும் காயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகே உள்ள அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குன்னம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
