மனைவி, மகனை பார்க்க இனிப்புடன் சென்ற கொத்தனார் பைக் விபத்தில் பரிதாப பலி

பெரம்பலூர், பிப். 25: பெரம்பலூர் அருகே மாமனார் வீட்டில் தங்கியுள்ள மனைவி, மகனை பார்க்கச்சென்ற கொத்தனார் பைக்கிலிருந்து தவறி விழுந்து பலியானார். பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் மணிகண்டன்(25). கொத்தனார் வேலை செய்து வரும் மணிகண்டன் நேற்று(24ம்தேதி) கொத்தனார் வேலையை முடித்துவிட்டு மாலையில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மாமனார் வீட்டில் தங்கியுள்ள மனைவி ஹேமமாலினி(21), மகன் ஹர்ஷித்(1) ஆகிய இருவரையும் பார்ப்பதற்காக தனது பைக்கில் சென்றுள்ளார்.

நேற்றிரவு 7.15 மணிக்கு பார்த்துவிட்டு வருவதற்காக பெரம்பலூர் டவுனுக்கு வந்து, இனிப்பு, பழங்களை வாங்கிக் கொண்டு, விளாமுத்தூர் சாலை வழியாக சிறுவாச்சூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மேற்கேயுள்ள அரசு சுற்றுலா மாளிகை அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்த போது பைக் தடுமாறியதில் நிலை தவறி கீழே விழுந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.

தகவலறிந்து அங்கு சென்ற பெரம்பலூர் டவுன் போலீசார், இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Related Stories: