பொன்னமராவதி, டிச.2: பொன்னமராவதி சிவன் கோயிலில் மூன்றாவது கார்த்திகை மாத சோமவாரத்தையொட்டி சங்காபிசேகம் மற்றும் மஹா ருத்தர ஹோம விழா நடந்தது. பொன்னமராவதி ஆவுடயநாயகி சமேத ராஜாராஜ சோழீஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத மூன்றாவது சோமவார விழா நடைபெற்றது. இதனையொட்டி, 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு சங்காபிஷேக செய்து, சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று நடந்த மூன்றாவது சோமவார விழாவில் சங்கல்பம், 108 சங்குகளுக்கு பூஜை, கலச பூஜை, மஹாருத்ர ஹோமம், பூர்ணாகுதி, கலசங்கல் கோயில் வலம் வருதல், சுவாமி அம்பாளுக்கு 108 சங்காபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. அதேபோல, பொன்னமராவதி பாலமுருகன் கோயில், வலையபட்டி மலையாண்டி கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் வழிபாடு நடைபெற்றது. இதில், பொன்னமராவதி மற்றும் சுற்றுப்பகுதி பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
