ஈரோடு, டிச. 2: ரேபிஸ் நோய் என்பது வைரஸ் தாக்குதல். இது, மனித நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஓர் உயிர் கொல்லி நோயாகும். ரேபிஸ் பாதிக்கப்பட்ட மிருகங்கள் கடிப்பதன் மூலமாகவோ, அவற்றின் எச்சில் வழியாகவோ மனிதர்களுக்கும் மற்ற மிருகங்களுக்கும் ரேபிஸ் நோய் பரவுகிறது.
இந்தியாவில் பெரும்பாலும் நாய்களின் மூலமாகவே மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. மேலும் பூனை, குரங்குகள் மற்றும் வன விலங்குகள் மூலமாகவும் பரவ வாய்ப்பு உள்ளது. ஒருவேளை செல்ல பிராணிகள் அல்லது வனவிலங்குகள் மனிதர்களை கடித்து விட்டாலோ அல்லது நகத்தினால் கீறி விட்டாலோ, அவற்றின் எச்சில் நம் மீது பட்டாலோ உடனடியாக கடிபட்ட இடத்தை 15 நிமிடங்கள் குழாய் நீர் மற்றும் சோப்பு நுரை கொண்டு கழுவ வேண்டும்.
