ஊதிய உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் தாலுகா அலுவலகத்தில் மனு

ஆண்டிபட்டி, ஜன. 12: ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதிகளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உள்ளனர். இவர்கள் வீடுகளிலும், விசைத்தறி கூடங்களிலும் சேலைகளை நெய்து வருகின்றனர். இதில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும். கடந்த முறை போடப்பட்ட ஒப்பந்தம் டிச.31ல் முடிந்தது. இதனால், புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த, விசைத்தறி தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இவர்களுக்கு 13 சதவீத கூலி உயர்வு தர விசைத்தறி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில், ஜவுளி உற்பத்தியாளர்களிடம் நுால் வாங்கி சேலை உற்பத்தி செய்பவர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் இன்னும் முடிவாகவில்லை.

இந்நிலையில், விசைத்தறி உரிமையாளர்கள் நுால் விலை உயர்வை காரணம் காட்டி விசைத்தறி கூடங்களில் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தி உள்ளனர். இதனால், சக்கம்பட்டி, டி.சுப்புலாபுரம் பகுதியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். இதனால் தங்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணக்கோரி சக்கம்பட்டி பகவதியம்மன் கோயிலிலிருந்து இருந்து 300க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் ஊர்வலமாக சென்று, ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் மனு கொடுத்தனர். இதையடுத்து நாளை (ஜன.13) ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் அதிகாரிகள் முன்னிலையில், விசைத்தறி உரிமயைாளர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் குழுவுடன் பேச்சுவார்த்தைக்கு நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.

Related Stories: