ஸ்மார்ட் கிளாஸ் எடுப்பதாக ரூ.35 லட்சம் மோசடி பள்ளி தாளாளருக்கு விதித்த தண்டனை உறுதி: கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை, டிச.2: ஸ்மார்ட் கிளாஸ் எடுப்பதாக லட்சக்கணக்கில் மோசடி வழக்கில் தனியார் பள்ளி தாளாளருக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை உறுதி செய்து ெசன்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வடபழனி துரைசாமி சாலையை சேர்ந்த சிவகுமார் சாது (52) ஸ்மார்ட் கிளாஸ் நடத்தி வருகிறார். இவரிடம் கொளத்தூரை சேர்ந்த வெஸ்லி என்ற தனியார் பள்ளி ஸ்மார்ட் வகுப்பு மற்றும் பள்ளி மேம்பாட்டு பணிகள் தொடர்பாக ஒப்பந்தம் செய்தது. அதனடிப்படையில் இதையடுத்து, சிவகுமார் ரூ.35 லட்சம் வரை மேம்பாட்டு பணிகளுக்காக செலவு செய்துள்ளார். ஆனால், தனியார் பள்ளி சார்பில் எந்த செலவும் செய்யப்படவில்லை. அதேநேரம், வருமானத்தில் 40 சதவீதத்தை மட்டும் எடுத்துக்கொண்டது.

இதையடுத்து, தான் செலவு செய்த பணத்தை சிவகுமார் கேட்டபோது பள்ளியின் தாளாளர் சுகிர்தா வைஸ்லெட் கடந்த 2022 ஜனவரியில் ரூ.5 லட்சத்திற்கான செக்கை கொடுத்துள்ளார். அந்த பணத்தை சிவகுமார் வங்கியில் டெபாசிட் செய்தபோது கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்துள்ளது. இதையடுத்து சுகிர்தா மீது சிவகுமார் செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த 25வது பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம், சுகிர்தா வைஸ்லெட்டுக்கு 45 நாட்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஆர்.சண்முக சுந்தரம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பாதிக்கப்பட்ட சிவகுமார் சார்பில் வழக்கறிஞர் பூ.வேலுமணியன் ஆஜராகி வழக்கை தள்ளுபடி செய்யுமாறு வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பளித்தார்.

Related Stories: