சென்னை: துணை கலெக்டர், போலீஸ் டிஎஸ்பி உள்ளிட்ட குரூப் 1 பதவிக்கான மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 78 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஏப்ரல் 1ம் தேதி வெளியிட்டது. இதில் துணை கலெக்டர் 28 இடங்கள், போலீஸ் டிஎஸ்பி 7 இடம், வணிகவரி உதவி ஆணையர் 19, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் 15, மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி 3, தொழிலாளர் நல உதவி ஆணையர் 6 ஆகிய 78 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வனப் பாதுகாவலர் 2 காலியிடங்களுக்கான குருப் 1 ஏ அறிவிப்பும் நிரப்பப்படுகிறது. இத்தேர்வுக்கான முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் அனுமதிக்கப்பட்டனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஜூன் மாதம் 15ம் தேதி நடந்தது. இத்தேர்வை 1 லட்சத்து 86 ஆயிரம் 128 பேர் எழுதினர். தொடர்ந்து ஆகஸ்ட் 28ம் தேதி ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் தற்காலிகமாக 1801 பேர் மெயின் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கான குரூப் 1 மெயின் தேர்வு இன்று தொடங்குகிறது. மெயின் தேர்வு தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு நடக்கிறது. அதாவது சென்னை கே.கே.நகர் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி என்கேடி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருவல்லிக்கேணி தி முஸ்லிம் அரசு மேல்நிலைப்பள்ளி, தி.நகர் கர்நாடக சங்கீதா மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட சென்னையில் 18 இடங்களில் தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. முதல் நாளான இன்று முதல் தாள் தேர்வு நடக்கிறது. அதாவது தமிழ் தகுதி தேர்வு நடக்கிறது. இது 100 மதிப்பெண்ணுக்கு நடத்தப்படும் தேர்வாகும். வினாக்கள் அனைத்தும் 10ம் வகுப்பு தரத்தில் கேட்கப்படும். காலை 9.30 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து நாளை 2ம் தாள் தேர்வும், நாளை மறுநாள்(3ம் தேதி) 3ம் தாள் தேர்வும் நடக்கிறது. 4ம் தேதி 4ம் தாள் தேர்வும் நடக்கிறது.
தேர்வுக் கூடங்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர்கள் (10 தேர்வர்களுக்கு ஒருவர்) நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோகிராப் செய்யப்பட உள்ளது. எல்லா மையங்களிலும் ஜாமர் கருவிகள் பொருத்தப்படுகின்றன. தேர்வர்கள் தேர்வு கூடங்களுக்கு காலை 9 மணிக்கு முன்னரே செல்ல வேண்டும். 9 மணிக்கு மேல் வரும் தேர்வர்கள் தேர்வுக் கூடத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வில் கருமை நிற மை பேனாக்களை தவிர மற்ற நிற மை பேனாக்களை( வண்ணப் பென்சில்கள், வண்ண மைப்பேனா) உபயோகப்படுத்தக்கூடாது. தடை செய்யப்பட்ட மின்னணுச் சாதனங்கள் எடுத்துச் செல்லக் கூடாது என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவுறுத்தியுள்ளது. மேலும் குரூப் 1 ஏ பதவிக்கான மெயின் தேர்வும் இன்று தொடங்குகிறது. தொடர்ந்து முறையே 8,9,10ம் தேதிகளில் தொடர்ச்சியாக தேர்வுகள் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
