சென்னை: மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ தூரத்திற்கு தாது மணல் படர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தாது மணல் என்பது இயற்கை நமக்கு அளித்த ஒரு வரப்பிரசாதமாகும். அதாவது, பல்வேறு மலைகள், பாறைகள் சமவெளிகளை கடந்து வந்த ஆறுகள் கொஞ்சம், கொஞ்சமாக அவற்றின் மேற்பரப்பை அரித்து நீரோட்டத்தோடு கொண்டு வந்து கடலில் சேர்க்கும். பின்னர், அவை கடற்கரையில் ஒதுங்குகின்றன. கனமான, தாது மணல் என்பது தாது வைப்புகளின் ஒரு வகுப்பாகும். இது சிர்கோனியம், டைட்டானியம், தோரியம், டங்ஸ்டன், அரிய பூமி கூறுகள், தொழில்துறை கனிமங்கள், வைரம், சபையர், கார்னெட் மற்றும் எப்போதாவது விலைமதிப்பற்ற உலோகங்கள் அல்லது ரத்தினக் கற்கள் ஆகியவற்றின் முக்கிய ஆதாரமாக விளங்குகிறது.
இதற்கு, முன்பு தமிழக கடற்கரையில் இருந்து அள்ளப்படும் தாது மணலில் இருந்து பல்வேறு விதமான தாது பொருட்கள் தனித்தனியாக பிரித்து எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது, கடத்தல் சம்பவங்களை தொடர்ந்து கடற்கரை பகுதிகளில் தாது மணல் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தாது மணல் இயற்கையாகவே கதிரியக்க தன்மை கொண்டவையாகும். இந்நிலையில், கடந்த சில தினங்களாக மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் நீரோட்டத்தோடு அடித்து வரப்பட்ட தாது மணல் கடற்கரை பகுதி படந்துள்ளது. சுமார் 10 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுவதும் மணல் பரப்பு கறுப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இது, காந்தகம் வைத்தால் இழுக்கும் திறன் கொண்டது. காந்தகத்தில், கறுப்பு நிற தாது மணல் ஒட்டிக்கொள்ளும், மற்ற மணல்கள் காந்தகத்தில் ஒட்டும் திறன் அற்றவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், ஆண்டுதோறும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் கடலின் தன்மை மாறுபட்டு காணப்படும். ஆர்ப்பரிக்கும் கடல் அலையில் அடித்து வரப்பட்டு கரைப்பகுதியில் தாது மணல் அலையில் அடித்து வரப்பட்டு மற்ற மணலுடன் கரைப்பகுதியில் தேங்கி நிற்கும். தாது மணல் நீரோட்டத்துடன் அடித்து வரப்படும் நேரங்களில் கடல் சீற்றமாக காணப்படும் என்றனர்.
தாது மணலில் இனப்பெருக்கம் செய்யும் கடல்வாழ் உயிரினங்கள்
கடலில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றது. குறிப்பாக, அக்டோபர் நவம்பர், டிசம்பர் மாதங்களில் தாது மணல் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்குகிறது. இந்த, தாது மணல் மிகவும் மிருதுவாக இருப்பதால், இதில் ஆமைகள், சங்குகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் இனப்பெருக்கம் செய்வதாக கூறப்படுகிறது.
புகைப்படம் எடுக்கும் சுற்றுலாப் பயணிகள்
மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள புரதான பிரச்சனைகளை கண்டு ரசிப்பதோடு, கடற்கரைக்கும் சென்று பொழுதை கழிக்கின்றனர். அப்படி, கடற்கரையில் பொழுதை கழிக்க வரும் பயணிகள், அங்கு படர்ந்துள்ள தாது மணலை ஆச்சரியத்துடன் பார்த்து தங்கள் செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
கடல் சீற்றத்தால் கரை ஒதுங்கும் தாது மணல்
அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 4 மாதங்கள் கடலில் சீதோஷ்ன நிலை காணப்படும். அந்த, நேரங்களில் கடல் மிகவும் குளிர்ந்த நிலையில் காணப்படும். அப்போது, கடல் சீற்றம் அதிகரித்து காணப்படும். இந்த, கடல் சீற்றத்தால் தாது மணல் கரை ஒதுங்கும். பின்னர், சீதோஷ்ன நிலை முடிந்த பிறகு வழக்கமாக தாது மணல் மீண்டும் கடலுக்கு சென்று விடும்.
