ஆரணி பேரூராட்சியில் இடிந்து விழும் நிலையில் கால்நடை மருத்துவமனை: விபத்துக்கு முன் நடவடிக்கை எடுக்கப்படுமா என எதிர்பார்ப்பு

ஊத்துக்கோட்டை: பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் புதர்கள் மண்டி இடிந்து விழும் நிலையில் காணப்படும் பழைய கால்நடை மருத்துவமனையை விபத்துக்கு முன்பாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பெரியபாளையம் அருகே, ஆரணி பேரூராட்சியில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் விவசாயிகள் அதிக அளவு உள்ளனர். மேலும், இங்குள்ள ஆரணி பேரூராட்சி அலுவலகம் அருகில் 50 வருடத்திற்கு முன்பு கால்நடை மருத்துவமனை கட்டப்பட்டது. இந்த கால்நடை மருத்துவமனைக்கு ஆரணி, மங்களம், மல்லியங்குப்பம், புதுப்பாளையம், குமரபேட்டை, திருநிலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் உள்ளிட்ட விலங்குகள் உடல் நிலை பாதிக்கப்பட்டால் சிகிச்சைக்காக அதை வளர்ப்பவர்கள் கொண்டு வருவார்கள்.

இந்நிலையில், இந்த கால்நடை மருத்துவமனையான ஓடு போட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்து விரிசல் ஏற்பட்டு, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, புதிய கால்நடை மருத்துவமனை கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், கடந்த 7 வருடங்களுக்கு முன்பு புதிய கால்நடை மருத்துவமனை பழைய கட்டிடத்தின் அருகில் அதன் வளாகத்திலேயே கட்டப்பட்டது. தற்போது, கால்நடை மருத்துவமனை புதிய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்நிலையில், பழைய ஓடு போட்ட கட்டிடத்தில் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் மது அருந்துவது, சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு தீய பழக்கங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும், பழைய கட்டிடம் மிக்ஜாம் புயலில் சேதமடைந்து விட்டது.

எனவே, பழைய மற்றும் புதிய கால்நடை மருத்துவமனையை சுற்றி தற்போது புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயன்பாடில்லாத பழைய ஓடு போட்ட கட்டிடத்தை அகற்றி, மேலும் புதிய கட்டிடத்தை சுற்றி சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: