மத சடங்குகளில் சேர மறுத்த விவகாரம் கிறிஸ்துவ ராணுவ அதிகாரியின் பணி நீக்கத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: ‘மத வழிபாட்டில் பங்கேற்க மறுப்பது ராணுவத்திற்கே தகுதியற்ற செயல்’ என கடும் கண்டனத்துடன் கிறிஸ்தவ அதிகாரியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடந்த 2017ம் ஆண்டு ராணுவத்தில் லெப்டினன்ட் அதிகாரியாக பணியாற்றியவர் சாமுவேல் கமலேசன். ராணுவத்தில் ஒரு படைப்பிரிவில் பணியாற்றும் அனைத்து வீரர்களும் மத வழிபாட்டு நிகழ்ச்சிகளில் கட்டாயம் பங்கேற்க வேண்டும். இதற்காக படைப்பிரிவினர் தங்கியிருக்கும் முகாமில் சர்வ தர்ம ஸ்தலம் அமைக்கப்படும். இதை மத அணிவகுப்பு என்பவர். ராணுவ வீரர்கள் இடையே மத நல்லிகணக்கத்தை ஏற்படுத்த இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

சாமுவேல் தலைமை பொறுப்பேற்ற படைப்பிரிவில் சீக்கிய வீரர்கள் மட்டும் இருந்ததால் அந்த முகாமில் ஒரு கோயிலும், குருத்வாராவும் மட்டும் அமைக்கப்பட்டிருந்தது. இதில் நடக்கும் மத வழிபாடுகளில் பங்கேற்க சாமுவேல் தொடர்ந்து மறுத்து வந்தார். பூஜைகள் செய்யும் கோயில் கருவறையில் நுழைவது தனது கிறிஸ்தவ மத நம்பிக்கைக்கு விரோதமானது என கூறினார். இதனால் ராணுவத்தில் இருந்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ராணுவத்தின் இந்த உத்தரவை டெல்லி உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

இதை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘இது ஒரு ராணுவ அதிகாரியின் மிக மோசமான ஒழுக்கமின்மை. தலைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் படைகளை அவமதிக்கிறீர்கள். மத வழிபாட்டில் பங்கேற்க மறுப்பது ராணுவத்திற்கே தகுதியற்ற செயல்’’ என கடும் கண்டனத்துடன் மனுவை தள்ளுபடி செய்தார்.

Related Stories: