புதுடெல்லி: ஈரானுடன் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா போரில் ஈடுபட்டுள்ள நிலையில் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான டர்பைன் எரிவாயு விலை நேற்று அதிகரிக்கப்பட்டது. உள்நாட்டு விமான நிறுவனங்களுக்கான விமான டர்பைன் எரிபொருள் கடந்த மாதம் ரூ.96,638.14ஆக இருந்தது. தற்போது ரூ.8289.04(அதாவது 8.56 சதவீதம்) உயர்த்தப்பட்டு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1,04,927.18ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இந்தியாவில் எரிபொருள் நிரப்பும் எந்தவொரு சர்வதேச விமான நிறுவனத்திற்கும் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. டெல்லியில் விமான டர்பைன் எரிபொருள் விலை ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.110,703.08 உயர்த்தப்பட்டு ரூ.207,341.22 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததை தொடர்ந்து எண்ணெய் விலைகள் உயர்த்தப்பட்டதால் கடந்த 2022ம் ஆண்டு ஒரு கிலோ லிட்டருக்கு ரூ.1.1லட்சம் வரை விலை உயர்த்தப்பட்டது.இது இதற்கு முந்தைய உச்சபட்ச விலை உயர்வாகும். இது விலையில் ஏற்படும் இரண்டாவது மாதாந்திர உயர்வாகும். மார்ச் ஒன்றாம் தேதி விலைகள் 5.7சதவீதம் உயர்த்தப்பட்டது. போர் காரணமாக வான்வெளிகள் மூடப்பட்டு இருப்பதால் மேற்கத்திய நாடுகளுக்கு செல்வதற்காக விமானங்கள் நீண்ட வழித்தடங்களில் பயணிப்பதால் அதிக எரிபொருளை பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் விலை உயர்வு அவற்றுக்கு மேலும் ஒரு சுமையை ஏற்படுத்தும்.
