திருவண்ணாமலை, நவ.27: திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.23.37 கோடி மதிப்பில் கட்டப்படும் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடத்தை அரசு முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ரூ.23.75 கோடி மதிப்பில் புதியதாக தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. அதனை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், கலெக்டர் தர்ப்பகராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கவும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்காமல் விரைவில் வெளியேறும் வகையிலும், மின் பழுதுகள் ஏற்படாமல் தரமான முறையில் மின்சார வசதி ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும், தாய் சேய் நலப்பிரிவு, 500 படுக்கைகள் கொண்ட கட்டிடப் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, ஆய்வகங்கள் மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் சிகிச்சை மையம் ஆகிய பிரிவுகளை முதன்மை் செயலாளர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அங்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும், மருந்து, மாத்திரைகள் கையிருப்புகள் குறித்தும் கேட்டறிந்தார். அதோடு, சிகிச்சைக்கு வரும் மருத்துவ பயனாளிகளிடம் நம்பிக்கை அளிக்கும் வகையில் கனிவுடன் அணுக வேண்டும் என்றார். ஆய்வின்போது, திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி முதல்வர் மோகன்காந்தி, மருத்துவமனை கண்காணிப்பாளர் மாலதி, நிலைய மருத்துவ அலுவலர் கதிர், இணை இயக்குனர் நலப்பணிகள் கவிதா, மாவட்ட சுகாதார அலுவலர்கள் பிரகாஷ், சதீஷ்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
