பச்சை குத்த கூறிய தகராறில் மோதல் 3 வாலிபர்கள் கைது காணும் பொங்கல் விழாவில்

செய்யாறு, ஜன. 20: காணும் பொங்கல் விழாவில் கையில் பச்சை குத்த கூறிய தகராறில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதுதொடர்பாக 3பேரை போலீசார் கைது செய்தனர். செய்யாறு அடுத்த சேராம்பட்டு கிராமத்தில் உள்ள எல்லையம்மன் கோயிலில் காணும் பொங்கல் விழா கடந்த 17ம் தேதி கொண்டாடப்பட்டது. கோயில் அருகே 100க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டு வியாபாரம் நடைபெற்றது. அதே கிராமத்தை சேர்ந்த பாலாஜி(55) என்பவரது வீட்டின் முன்பு உடலில் பச்சை குத்தும் கடை வைக்கப்பட்டிருந்தது. அன்றிரவு தண்டரை கிராமத்தை சேர்ந்த கவுதம், சூர்யா, ஜெகதீசன் ஆகியோர் பச்சை குத்தும் கடைக்கு சென்று கையில் பச்சை குத்தும்படி ேகட்டுள்ளனர். அதற்கு கடைக்காரர், ‘இரவு 11 மணியாகிவிட்டது, போலீசார் கடையை மூட சொல்லிவிட்டார்கள். நாளை வந்து பச்சை குத்திக்கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது கடைக்காரருக்கு ஆதரவாக பாலாஜி, அவரது மகன் திரிசூல்குமார் ஆகியோர் கவுதம் உள்ளிட்ட 3 பேரையும் தட்டிக்கேட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கவுதம், சூர்யா, ஜெகதீசன், ஆகியோர் பாலாஜி, திரிசூல்குமாரை சரமாரி தாக்கியுள்ளனர். அப்போது கவுதமுக்கு ஆதரவாக வந்த தண்டரை கிராமத்தை துர்கைபிரசாத்(27) என்பவரை பாலாஜியும், திரிசூல்குமாரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இதில் படுகாயம் அடைந்த பாலாஜி, துர்கைபிரசாத் ஆகியோர் செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து இருதரப்பினரும் செய்யாறு போலீசில் தனித்தனியே புகார் கொடுத்தனர். அதன்பேரில் திரிசூல்குமார் மற்றும் சூர்யா, ஜெகதீஸ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: