டெல்டாவில் மழை ஓய்ந்தது; நீரில் மூழ்கிய 1 லட்சம் ஏக்கர் பயிர்கள் அழுகும் அபாயம்: தண்ணீரை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்

திருச்சி: டெல்டா மாவட்டங்களில் 1லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி இளம்பயிர்கள் இன்று 3வது நாளாக தண்ணீரில் மூழ்கி கிடக்கிறது. இதனால் பயிர்கள் அழுகி பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டங்களிலும் கடந்த 3 நாட்களாக தொடர் மழை பெய்தது. நேற்று மாலைக்கு பின்னர் மழை ஓய்ந்தது. தொடர் மழை காரணமாக சம்பா, தாளடி வயல்களில் நடவு செய்து 30 நாட்களே ஆன இளம் பயிர்கள் இடுப்பளவு நீரில் மூழ்கியுள்ளது. நாகை மாவட்டத்தில் கீழ்வேளூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் 20 நாட்களான 50,000 ஏக்கர் இளம் சம்பா, தாளடி பயிர்கள் இன்று 3வது நாளாக மழை நீரில் மூழ்கி கிடக்கிறது. இதேபோல் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே ஆலங்காடு,தேவநல்லூர் வேட்டங்குடி, ஆமைபள்ளம், ,எடமணல், திருக்கருக்காவூர், ஆரப்பள்ளம், நல்லூர், காட்டூர், மகேந்திரப்பள்ளி, பச்ச பெருமாநல்லூர், உமையாள்பதி, பழையபாளையம், மகாராஜபுரம், குதிரைகுத்தி உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் சம்பா நேரடி விதைப்பு பயிர் மழைநீரில் மூழ்கியுள்ளது. இதேபோல் செம்பனார்கோவில், தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, கோவிலூர், வடகாடு, நொச்சூர், ஆலங்காடு, பாலாவை, புத்தகரம் உள்ளிட்ட பகுதிகளில் நடவு செய்து 30 நாட்களான 1200 ஏக்கர் தாளடி, எடையூர், வடசங்கேந்தி, கமாரபுரம், மாங்குடி உள்ளிட்ட பகுதிகளில் 1000 ஏக்கர் தாளடி பயிர்கள் இடுப்பளவு மழைநீரில் மூழ்கியுள்ளது. வடிகாலை தூர்வாரினால் தான் தண்ணீரை வடிய வைக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர். மாவட்டம் முழுவதும் 15,000 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியுள்ளது. தஞ்சை மாவட்டம் பல்லவராயன்பேட்டை, சாலியமங்கலம், திருக்கருக்காவூர், புலவர்நத்தம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் 15,000 ஏக்கரும், புதுக்கோட்டை மாவட்டத்தில் கறம்பக்குடி, அறந்தாங்கி பகுதிகளில் 300 ஏக்கர் சம்பா பயிர்களை மழை நீர் சூழ்ந்துள்ளது.

மீனவர்கள் முடக்கம்;
நாகை மீனவர்கள் 12வது நாளாகவும், மயிலாடுதுறை, காரைக்கால், தஞ்சை, புதுக்கோட்டை மீனவர்கள் 7வது நாளாக இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1.50லட்சம் மீனவர்கள், மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். சுமார் ரூ.400 கோடி மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

3 குழந்தைகளின் தாய் பலி;
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கணபதி விளாகத்தை சேர்ந்தவர் ஜெயந்தி(40). இவருக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். நேற்றுமாலை மழை பெய்தபோது ஜெயந்தி அதே பகுதியில் நடந்து வந்தபோது மழையால் அறுந்து விழுந்து கிடந்த மின்கம்பியை மிதித்துவிட்டார். இதில் மின்சாரம் பாய்ந்ததில் அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக பலியானார். தந்தையும் இறந்த நிலையில் தாயும் இறந்ததால் அவர்களது 3 குழந்தைகளும் அனாதைகளாகினர்.

Related Stories: