சென்னை: கரூர் சம்பவத்தை அடுத்து, த.வெ.க.வினர் கைது நடவடிக்கைகளை கண்டித்து எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளத்தைப் போல் புரட்சி ஏற்படும் என்று பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது வன்முறையை தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜுனா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
உத்தரவில், செப்டம்பர் 29ம் தேதி இரவு 11:28 மணிக்கு போடப்பட்ட பதிவு, 34 நிமிடங்களில் நீக்கப்பட்டுள்ளது. மறுநாள், புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனாவின் பதிவால், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என புகார்தாரர் அச்சம் தெரிவித்த நிலையில், இந்த மனு விசாரணைக்கு எடுத்த வரை எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் ஏற்படவில்லை. உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு, வன்முறையையோ, வெறுப்பையோ தூண்டும் வகையில் இப் பதிவு இல்லை.
அது அரசியல் ரீதியிலான கருத்து. மக்களின் மனநிலையை கூறும் வகையில் மட்டுமே இந்த பதிவு அமைந்துள்ளது. ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப்பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற புதிய குற்ற விசாரணை முறை சட்டம் தெரிவிப்பதால் ஆதவ் அர்ஜுனா மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
