‘மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, பரோட்டாவும் உண்டு’ வெளிநாடுகளுக்கு பறந்தால் ‘சுடச்சுட இலவச பிரியாணி’: ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவிப்பு

சென்னை: சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்திய சுவையான உணவுகளையும் மற்றும் பிரியாணி உள்ளிட்ட இந்தியாவின் சிறப்பான உணவுகளையும் இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, சென்னை- துபாய்-சென்னை, சென்னை- சிங்கப்பூர்- சென்னை மற்றும் சென்னையில் இருந்து மும்பை டெல்லி வழியாக பல்வேறு வெளிநாடுகளுக்கு செல்லும் ஏர் இந்தியா விமான பயணிகள் உள்ளிட்டோருக்கு இந்த உணவு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உணவில் தென்னிந்திய உணவுகளான குறிப்பாக தமிழ்நாட்டு உணவான மிளகாய் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி ஆகியவைகளும் வழங்கப்பட இருக்கின்றன.

இதுதவிர சுவையான பிரியாணி வகைகள், மலபாரி சிக்கன் கறி, சிக்கன் பிம்பாப் மற்றும் வட இந்திய சைவ அசைவ உணவுகள், ஆசிய ஐரோப்பிய நாடுகளின் உணவுகள், ஜப்பான் நாட்டு உணவுகள் என்று பல தரப்பு உணவுகளையும் சிறந்த சமையல் கலைஞர்கள் மூலம் தயாரித்து விமான பயணிகளுக்கு சுடச்சுட விமானங்களில் பரிமாறுவதற்கு ஏற்பாடுகளை ஏர் இந்தியா நிறுவனம் செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பயணிகள் விமானங்களில் பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே, பயணிகளுக்கு சைவ உணவா அசைவ உணவா எந்த விதமான உணவுகள் வேண்டும், அதேபோல் விருப்பப்படும் உணவுகள் குறித்தும் தெரியப்படுத்தி விட வேண்டும். அவ்வாறு செய்துவிட்டால் பயணிகளுக்கு விருப்பமான உணவுகள் விமானத்தில் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவிக்கிறது.

ஆனால் இந்த உணவு வகைகள் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு தான் தற்போது இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகளுக்கு போதைக்கு இந்த திட்டம் கிடையாது. ஆனால் வெகு விரைவில் உள்நாட்டு ஏர் இந்தியா விமான பயணிகளும் இதுபோன்ற உணவு வகைகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனத்தின் சகோதர நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு இதுபோன்ற உணவு திட்டம் எதுவும் கிடையாது. இது ஏர் இந்தியா பயணிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஏர் இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. வெளிநாடுகளில் நீண்ட காலம் வசித்து விட்டு இந்தியாவுக்கு திரும்பி வரும் பயணிகள் குறிப்பாக தென்னிந்திய தமிழ்நாட்டு பயணிகள் விமானங்களைவிட்டு கீழே இறங்கியதும் இட்லி மிளகாய் பொடி, சாம்பார் சட்னி போன்றவர்களுக்காக ஓட்டல்களை தேடி ஓடுவார்கள்.

இனிமேல் அதுபோன்ற பிரச்னை இல்லை. வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வரும் போதே விமானங்களில் இட்லி மிளகாய் பொடி, சட்னி, சாம்பார், மசால் தோசை, கிச்சடி பரோட்டா போன்ற உணவுகள் பயணிகளுக்கு கிடைக்கும் என்ற தகவல் பயணிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Related Stories: