ராஞ்சி: ஜார்க்கண்ட், மேற்கு வங்கத்தில் நிலக்கரி மாபியாக்களுக்கு எதிராக அமலாக்கத்துறையினர் 40க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று சோதனை நடத்தினர். இதில் ரூ.10 கோடி ரொக்கப்பணம், தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக தன்பாத்தில் நேற்று ஒரே நாளில் 18 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். பொது துறை நிறுவனமான பிசிசிஎல் நிறுவனத்தில் அவுட்சோர்ஸ்- பணிகளை கையாளும் தேவ் பிரபா நிறுவன வளாகம், அதன் உரிமையாளர் எல்.பி.சிங், அவரது சகோதரர் கும்ப்நாத் சிங்கின் வீடுகளையும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது.
இந்த சோதனையின் போது தங்கம் மற்றும் ஏராளமான ரொக்க பணம் சிக்கின என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தின் துர்காப்பூர்,புருலியா,அவுரா,கொல்கத்தாவில் 24 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சட்டவிரோதமாக நிலக்கரி எடுத்தல், போக்குவரத்து,நிலக்கரியை சேமிப்பது தொடர்பாக சோதனை நடந்தது. இதில் காண்டிராக்டர்கள் நரேந்திர கார்கா, யுதிஷ்தர் கோஷ்,கிருஷ்ண முராரி,சின்மயி மண்டல், ராஜ்கிஷோர் யாதவ் ஆகியோரின் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.
இந்த ஒரு மெகா சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள், ஊழியர்கள் ஈடுபட்டனர். இதில் ரூ.10 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ரொக்கப்பணம் மற்றும் தங்கத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். மேற்கு வங்கத்தில் இருந்து ரூ.8 கோடி மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதே போல் ஜார்க்கண்டில் நடந்த சோதனைகளின் போது சுமார் ரூ.2.2 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்டில் உள்ள இடங்களில் இருந்து சுமார் 120 நிலப் பத்திரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
