குடிசை வீடு அபகரிக்க உறவினர்கள் முயற்சி: கலெக்டர் அலுவலகத்தில் பெண் புகார்

வேலூர், ஜன. 7: காட்பாடி அருகே குடிசை வீட்டை அபகரிக்க உறவினர்கள் முயற்சிப்பதாக, வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் இரு மகன்களுடன் தாய் கண்ணீர் மல்க மனு அளித்தார். காட்பாடி அடுத்த லத்தேரி கொல்லைமேடு கிராமத்தை சேர்ந்தவர் பிச்சாண்டி மனைவி ரேணுகாதேவி. இவர் தனது 2 ஆண் குழந்தைகளுடன் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவர் அதிகாரியிடம் கண்ணீர் மல்க அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் பிச்சாண்டி மனநிலை பாதிக்கப்பட்டவர். எங்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் மாற்றுத்திறனாளி. எனது கணவருக்கு சொந்தமான இடத்தில் உள்ள குடிசை வீட்டில் வசித்து வருகிறோம். தற்போது அரசு சார்பில் பசுமைவீடு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதையறிந்த எனது கணவரின் உறவினர்கள் சிலர், பசுமை வீடு கட்ட எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட என் கணவரிடம், குடிசை வீடு இருக்கும் இடத்திற்கு பணம் தருவதாக கூறி கையெழுத்து வாங்கியுள்ளனர். ஆனால் பணத்தை தரவில்லை. தற்போது அந்த குடிசை வீட்டை காலி செய்துவிட்டு செல்லும்படி கூறி தினமும் ஆபாசமாக பேசி தகராறு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து லத்தேரி போலீசில் புகார் செய்தேன். ஆனால் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நான் கூலி வேலைக்கு சென்று மாற்றுத்திறனாளி மகனையும், மனநிலை பாதிக்கப்பட்ட எனது கணவரையும் காப்பாற்றி வருகிறேன். எங்களது இடத்தை அபகரிக்க முயலும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காவிட்டால் 4 பேரும் தற்கொலை செய்து கொள்வோம். இவ்வாறு அதில் தெரிவித்திருந்தார். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Related Stories:

>