பீகாரில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் நீக்கப்படும்: அதிமுக ஒப்புதல்

திண்டுக்கல்: ‘பீகாரில் பாஜ கூட்டணியின் வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் வாக்குகள் நீக்கப்படும்’ என அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்லில் வஉசி 89வது குருபூஜையை முன்னிட்டு, நேற்று அவரது சிலைக்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: பீகார் தேர்தல் போல நூற்றுக்கு நூறு தமிழகத்தில் அதிமுக வெற்றி பெறும். பீகாரின் நிதிஷ்குமார் போல, 220 இடங்களுக்கு மேல் அதிமுக வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டு முதலமைச்சராக வருவார். எஸ்ஐஆரை எதிர்க்க ஒன்றுமில்லை. 5 ஆண்டுகளுக்கு, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

நமது சுதந்திரம் நமது உரிமை. இதனால் எஸ்.ஐ.ஆரில் எந்த பாதிப்பும் இல்லை. ஏன் இதை தடுக்கிறார்கள் தெரியவில்லை. அதற்கான ஆட்களை நியமனம் செய்து சம்பளம் கொடுத்தால் தான் வேலை செய்வார்கள். இருக்கும் ஊதியத்தை வைத்து அரசு ஊழியர்களை வேலை வாங்கினால் எவ்வாறு செய்வார்கள்? அரசு ஊழியர்கள் செய்வது நூற்றுக்கு நூறு சரி. எஸ்ஐஆரால் தமிழகத்தில் ஒரு கோடி வாக்குகள் குறையும் என சீமான் சொல்கிறார். அவர் கம்மியாக சொல்கிறார், அதைவிட அதிகமான வாக்குகள் குறையும். திண்டுக்கல் தொகுதியில் 40 ஆயிரம் முதல் 50,000 வாக்குகள் பாதிக்கும். இரட்டை ஒட்டுகள், இறந்தவர்களை கணக்கெடுத்தால் கரெக்டா வந்துவிடும்.
பீகாரில் பாஜ கூட்டணி வெற்றிக்கு காரணம் எஸ்ஐஆர் தான். எஸ்ஐஆர் எதிர்ப்பு போராட்டம் குறித்து விஜய்யிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: