கோவை மாவட்டத்தில் 10.11 லட்சம் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு

கோவை,ஜன.5:  கோவை உக்கடம் அருகே கெம்பட்டி காலனி பகுதியில் உள்ள ரேஷன் கடையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு, ரூ.2500 ரொக்கப்பணம்  மற்றும் விலையில்லா வேட்டி சேலைகள் ஆகியவற்றை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வழங்கினார். பின்னர் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்ததாவது: கோவை மாவட்டத்தில் 1400 ரேஷன் கடைகளில்  சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2500 ரொக்கப்பணம்,  ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, 20 கிராம் உலர் திராட்சை, 20கிராம் முந்திரி, 5 கிராம் ஏலக்காய் ஆகியவற்றுடன் ஒரு துணிப்பை  என ரூ.269.83 கோடி மதிப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

இத்திட்டம் மூலம் கோவை மாவட்டத்தில் உள்ள 10 லட்சத்து 11 ஆயிரத்து 845 குடும்ப அட்டைதாரர்கள் பயனடைவார்கள். பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி வாங்குவதற்கு ஏதுவாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் டோக்கன் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. மேலும் சமூக இடைவெளியினை கடைபிடித்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து குனியமுத்தூர், செல்வபுரம், சுகுணாபுரம்,  தெலுங்குபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். இந்நிகழ்ச்சியில்  அம்மன் கே.அர்ச்சுணன் எம்எல்ஏ, மாவட்ட  கலெக்டர் ராஜாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், மாநகராட்சி  கமிஷனர் குமாரவேல் பாண்டியன், துணை கமிஷனர் மதுராந்தகி, தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் பிரசன்னா ராமசாமி, மாவட்ட  வழங்கல் அலுவலர் குமரேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: