மக்களுக்கு ஒரு நீதி, கவர்னருக்கு ஒரு நீதியா? கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட கிரண்பேடி மீது நடவடிக்கை மத்திய உள்துறைக்கு காங். கடிதம்

புதுச்சேரி, ஜன. 5: புதுச்சேரியில் கொரோனா விதிமீறலில் ஈடுபட்ட கவர்னர் கிரண்பேடி மீது மத்திய உள்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆளுங்கட்சி எம்எல்ஏ லட்சுமி நாராயணன் வலியுறுத்தி உள்ளார். புதுச்சேரி முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, மத்திய உள்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் நேற்று அனுப்பியுள்ளார். அதில், கவர்னர் கிரண்பேடியின் உதவியாளராக ராஜ்நிவாசில் பணிபுரியும் ஈஷா அரோராவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு ஜிப்மரில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர், ராஜ் நிவாசிலேயே தங்கி பணிபுரிந்து வந்தார். மத்திய அரசின் சுகாதார அமைச்சகத்தின் அறிவுரைப்படி நோய் தொற்று ஏற்பட்டவரின் தங்குமிடம் அவரோடு தொடர்பு இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக குறைந்த பட்சமாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென விதி உள்ளது. இதனால் கவர்னரும் தன்னைத் தானே 7 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டும், ராஜ் நிவாஸ் 3 நாட்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அனைத்து விதிகளையும் மீறி நோய் தொற்று பரவும் விதமாக புதுச்சேரிக்கு வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சரை கவர்னர் கிரண்பேடி வரவேற்று உரையாடி இருப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.  இது கண்டிக்கத்தக்கது மற்றும் தண்டனைக்குரியது. பொது மக்களுக்கு ஒரு நீதி, ஆளுநருக்கு ஒரு நீதியா? என்பதை மாவட்ட ஆட்சியர் உறுதிபடுத்த வேண்டும். இப்படி விதி மீறலை செய்த கவர்னரை கண்டிக்கிறோம், இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

போலீசில் புகார் மனு

புதுச்சேரி தலைமை செயலர், கலெக்டர், டிஜிபி ஆகியோருக்கு மாணவர் கூட்டமைப்பு நிறுவனர் சுவாமிநாதன் நேற்று புகார் மனு அளித்துள்ளார். அதில் கொரோனா விதிகளுக்கு எதிராக மத்திய இணை அமைச்சரிடம் உண்மையை மறைத்து நேரில் அழைத்து சந்தித்த கவர்னர் மற்றும் கவர்னர் மாளிகை அதிகாரிகள் மீது உரிய வழக்குபதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார். இம்மனுவை பெரியகடை காவல் நிலையத்திலும் அவர் அளித்துள்ளார்.

Related Stories: