*ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்பு
நாகர்கோவில் : ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை ஓய்வூதியதாரர்கள் தடையின்றி ஓய்வூதியம் பெற உதவும் வகையில், டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் (டிஎல்சி) பிரசாரம் 4.0-ஐ கடந்த 1ம் தேதி முதல் வரும் 30ம் தேதி வரை நாடு முழுவதும் நடத்துகிறது.ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிப்பதை எளிதாக்கும் வகையிலான நடவடிக்கைகளின் முக்கிய அம்சமாக இது கருதப்படுகிறது. இதன்படி வீட்டில் இருந்தபடியே டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.
ஓய்வூதியதாரர்கள் நேரடியாக அலுவலகங்களுக்கு வர வேண்டியதில்லை. வீட்டில் இருந்தபடியே ஆதார் அடிப்படையிலான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (எப்ஏடி) பயன்படுத்தி ஆன்லைனில் சமர்ப்பிக்க முடியும்.
இந்த திட்டத்தின்படி நாகர்கோவில் ரயில்வே பென்சனர்கள் சங்கம் சார்பில் ஓய்வூதியம் பெறுபவர்கள் புதிய டிஜிட்டல் தொழில்நுட்ப முறையில் தங்களது வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது திருவனந்தபுரம் கோட்ட அக்கவுண்ட் ஆபீஸர் ஜெயச்சந்திரன் மேற்பார்வையில் இதற்கான பணிகள் நடைபெற்றன.
புதிய செயலி மூலம் பென்ஷன்தாரர்களின் முக அடையாளம் பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டது 50க்கும் மேற்பட்டவர்கள் இந்த தொழில்நுட்ப முறையில் தங்களது சான்றுகளை சமர்ப்பித்தனர் ஏற்கனவே பலர் வங்கிகளுக்கு நேரடியாக சென்றும் சான்றிதழ் சமர்ப்பித்து இருக்கிறார்கள் இனிவரும் காலகட்டங்களில் தொழில்நுட்ப முறையில் அவர்கள் வீட்டிலிருந்தே தங்களது வாழ்நாள் சான்றுகளை சமர்ப்பிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செயலியை பயன்படுத்துவது எப்படி?
டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பு குறித்து அதிகாரிகள் கூறுகையில், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஜீவன் பிரமான் மற்றும் ஆதார் பேஸ் ஆர்.டி போன்ற தேவையான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த செயலியை திறந்து, ‘‘டிஎல்சியை ஐ உருவாக்கு’’ என்பதை தேர்ந்தெடுத்து, ஆதார் எண், மொபைல் எண் மற்றும் ஓய்வூதிய விவரங்களை உள்ளிடவும், முக அங்கீகாரம் விருப்பத்தை தேர்வுசெய்து, கேமரா அணுகலை அனுமதித்து, திரையில் உள்ள வழிமுறைகளை பின்பற்றி உங்கள் முகத்தை படம்பிடிக்கவும்.
அங்கீகாரம் வெற்றிகரமாக முடிந்ததும், ஜீவன் பிரமான் ஐடி கிடைக்கும். இந்த ஐடி தானாகவே ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்துடன் (இபிஎப்ஒ) பகிரப்படும். சமர்ப்பித்தலை உறுதிப்படுத்தும் குறுஞ்செய்தி வரும். ஓய்வூதியதாரர்கள் டிஜிட்டல் முறையில் சான்றிதழை சமர்ப்பிக்க விரும்பாத பட்சத்தில், அருகில் உள்ள அஞ்சல் அலுவலகம், வங்கி அல்லது இபிஎப்ஒ அலுவலகத்திற்கு சென்று சமர்ப்பிக்கலாம் என்றனர்.
