பொதுமக்கள் கோரிக்கை அரிமளம் பகுதி விவசாயிகள் உடுமலைபேட்டைக்கு அனுபவ சுற்றுலா சென்றனர்

திருமயம், ஜன.4: அரிமளம் பகுதி விவசாயிகளை அட்மா திட்டத்தின் கீழ் இருசுழற்சி இனம் புழுவளர்ப்பு தொழில்நுட்பங்கள்குறித்த அறிந்து கொள்ள கண்டுணர்வு பயணம் அனுப்பி வைக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்டம் , அரிமளம் வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் வாயிலாக செயல்படுத்தப்படும் மாநில விரிவாக்கத் திட்டங்களின் உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (2020-2021) இருசுழற்சி இனம் புழுவளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் கண்டுணர்வு அனுபவ சுற்றுலாவினை வட்டார தொழில்நுட்ப குழு அமைப்பாளர் வேளாண்மை உதவி இயக்குநருமான காளிமுத்து தொடங்கி வைத்து 50 விவசாயிகள் திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டார இளநிலை ஆய்வாளர் ராஜநாராயணன் மல்பெரி ரகம் தேர்வு செய்தல், நாற்று உற்பத்தி, பராமரிப்பு குறித்தும், நீர், களைநிர்வாகம், உர நிர்வாகம், பூச்சி, நோய் மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி மற்றும் அறுவடை தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். உடுமலைப்பேட்டை, பட்டு வளர்ச்சி துறையின் இளநிலை ஆய்வாளர் சிநேகபிரியா இளம் புழு வளர்ப்பு மையம் மூலம் இளம் புழுக்கள் பெறுவது, இளம்புழு வளர்ப்புக்கு கடைபிடிக்க வேண்டிய வெப்பநிலை, ஈரப்பதம், புழுக்களுக்கு தேவையான நீர்ச்சத்து, ஊட்டச்சத்து உடைய மல்பெரி இலைகளை உணவாக இடுவது குறித்தும், புழு வளர்ப்பு மனை அமைப்பது குறித்தும், புழு வளர்ப்பு காலங்கள், தளவாடங்களின் பயன்பாடு, புழு வளர்ப்பில் தண்டு அறுவடை தொழில்நுட்பங்கள், சந்தைப்படுத்துதல் பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். மேலும் உடுமலைப்பேட்டை விவசாயிகள் அமைத்துள்ள மல்பெரி நாற்றுகள், புழு வளர்ப்பு, மனைகள், பட்டுகூடுகள் ஆகியவற்றை அரிமளம் பகுதி விவசாயிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் லெட்சுமிபிரபா, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா, முருகன் ஆகியோர்

செய்திருந்தனர்.

Related Stories: