பெரம்பலூரில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு பணி

பெரம்பலூர்,டிச.31: பெரம்பலூர் சப்.கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்கட்ட சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை நேற்று (30ம்தேதி) அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில், மாவட்டக் கலெக்டர் வெங்கட பிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். 2021-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலுக்காக மகாராஷ்டிரா மாநி லத்திலிருந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களான 840 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 430 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 1,140 வாக்குப் பதிவினை உறுதி செய்யும் இயந்திரங்களும் என மொத்தம் 2,410 இயந்திரங்கள் பெரம்பலூர் மாவட்டத்திற்கு வரப்பெற்றுள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தேர்தல்களுக்கு பயன்படுத்தப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ள 232 கட்டுப்பாட்டுக் கருவிகளும், 984 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 22 வாக்குப்பதிவினை உறுதிசெய்திடும் இயந்திரங்களும் என மொத்தம் 1,238 இயந்திரங்கள் கையிருப்பு உள்ளன. மேலும் பாதுகாப்பு அறை யில் வைக்கப்பட்டுள்ள 1,072 கட்டுப்பாட்டுக் கருவிகள், 1,414 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 1162 வாக்குப்பதிவினை உறுதிசெய்யும் இயந்திரங்கள் என மொத்தம் 3,648 இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அலுவலரான சத்யபிரதா சாஹூ உத்தரவின்பேரில் கடந்த 29ம்தேதி முதல் பெங்களூருவைச் சேர்ந்த பொறியாளர்களை கொண்டு முதல்கட்ட சரிபார்ப்பு பணிகள் பாதுகாப்பு நடைமுறைகளுடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் 31ம் தேதிக்குள் முடிவடையும். இந்த பணிகளை பெரம்பலூர் கலெக்டர்  வெங்கடபிரியா பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியின்போது சப்.கலெக்டர் பத்மஜா, சப்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாரதிவளவன், தேர்தல் தனி தாசில்தார் துரைராஜ், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Related Stories: