ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் பஞ்சமி நிலம் அபகரிப்பு, நில மோசடி குறித்து ஆலோசனை

கோவை,டிச.31:  கோவை மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் பஞ்சமி நில அபகரிப்பு, ஆதிதிராவிட மக்களுக்கு எதிரான நிலமோசடி, பண மோசடி உள்ளிட்ட 13 மனுக்கள் மீது அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர். தொடர்ந்து 3  மாதங்களுக்கு ஒருமுறை இந்த நலக்குழு கூட்டத்தை நடத்துவது என்று  முடிவு செய்யப்பட்டது. மேலும் அடுத்த கூட்டம் மார்ச் மாதம் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து ஆதிதிராவிட அமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: ஆதி திராவிடர், பழங்குடி மக்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காணும் வகையில் ஆதி திராவிடர், பழங்குடியின குழுக்கள் பல அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் கொரோனா அச்சம் காரணமாக குழு கூட்டம் ஏதும் நடத்தப்படவில்லை. எனவே இந்த குழுக்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவற்றை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு குழு கடந்த 2 வாரங்களுக்கு முன் அமைக்கப்பட்டது.

இந்த குழுவின் கூட்டம்தான் தற்போது நடைபெற்று உள்ளது. இந்த குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி ஆதிதிராவிடர்கள், பழங்குடியினரின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர். கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும்  பழங்குடியினர் நலத்துறை மாவட்ட அலுவலர் பிரபாகரன், கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சுரேஷ், பேராசிரியர்கள் அன்புசிவா, சிங்காரவேலு, சுரேஷ்பாபு உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: