திருவையாறு அருகே தாளடி நடவு பணிகளில் விவசாயிகள் மும்முரம்

திருவையாறு, அக்.26: திருவையாறு அருகே திருவேதிக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் தாளடி நடவு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவையாறு அருகே திருவேதிக்குடி, ராமாபுரம், தோட்டக்காடு, ஆலங்குடி, மானாங்கோரை உள்ளிட்ட பகுதிகளில் போர்வெல் மூலம் சுமார் 500 ஏக்கரில் முன் பட்ட குறுவை சாகுபடி பணிகள் நடந்து அறுவடை பணிகள் முடிந்தது. தற்போது தாளடி நடவு பணிகள் நடந்து வருகிறது .

இதில் டிகேஎம்15 ரக புது வகை நெல் இதன் வயது 130 நாள். நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சன்னரகம் மகசூல் ஏக்கருக்கு 60 கிலோ கொண்ட மூட்டை 60 மூட்டை கிடைக்கும். சென்ற ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நெல் மற்றும் சிஆர் 1009வகை மோட்டாரகம் ஆகிய ரகங்கள் அதிகமாக திருவேதிக்குடி சுற்றுவட்டாரத்தில் 500 ஏக்கருக்கும் மேல் தாளடி நடவு செய்யப்பட்டு வருகிறது. திருவேதிக்குடியில் தாளடி விதை நெல்கள் நாற்று விட்டு தற்போது நடவு செய்வதற்காக விவசாய தொழிலாளர்கள் நாற்று பறிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது வடகிழக்கு பருவ மழை தொடங்கி பெய்து வந்தாலும், ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மழைநீர் உடனடியாக வடிந்து விடுவதால் தாளடி பயிர்களுக்கு பாதிப்பு இல்லை என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இது குறித்து திருவேதிக்குடி விவசாயி வெங்கடாசலம் கூறியதாவது; இப்பகுதியில் போர் வசதி இருப்பதால் சம்பா சாகுபடி செய்வதில்லை. முன்பட்ட குறுவை சாகுபடி செய்து மழைக்கு முன்னதாக அறுவடை செய்து விடுவார்கள். பின்னர் தாளடி நடவு பணிகள் தொடங்கும். ஆற்றில் தண்ணீர் வந்ததும் அதனை வைத்து தாளடி பணிகள் தொய்வு இல்லாமல் நடைபெறும். தாளடி பயிர்களுக்கு மழை நல்லது, பாதிப்பு ஏற்படாது.இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: