பாடாலூர், அக்.26: ஆலத்தூர் தாலுகா காரை சொத்து தகராறில் விவசாயியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா வரகுபாடியை சேர்ந்தவர் வைத்திலிங்கம் (45), விவசாயி. இவர் மலையப்ப நகரில். சுப்பிரமணி என்பவருக்கு சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவரது தங்கை ஜானகி, கணவர் கனகராஜுடன் அதே கிராமத்தில் வசித்து வருகிறார்.கனகராஜிக்கும், அவரது தங்கை ரத்தினகுமாரிக்கும் இடையே வரகுபாடியில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை பங்கிட்டு கொள்வது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மைத்துனர் கனகராஜிக்கு ஆதரவாக வைத்திலிங்கம் பேசி வந்துள்ளார். இதனால் வைத்திலிங்கத்தும், ரத்தினகுமாரிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.இந்நிலையில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வைத்திலிங்கம் விவசாய நிலத்தில் தூங்கியுள்ளார். இதை அறிந்த ரத்தினகுமாரியின் மகன் விக்னேஷ் (30) , விவசாய நிலத்திற்கு சென்று வைத்திலிங்கத்திடம் தகராறு செய்துள்ளார். இந்த தகராறு முற்றியதில், கோபம் அடைந்த விக்னேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வைத்திலிங்கத்தை சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் உயிருக்காக போராடி கொண்டிருந்த வைத்திலிங்கத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சென்ற பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் சொத்து தகராறு தொடர்பாக விக்னேஷ், வைத்திலிங்கத்தை கொல்ல முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பாடாலூர் போலீசார் விக்னேசை கைது செய்தனர். மேலும் அவரிடம் இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
