பெரம்பலூர்,டிச.15: பெரம்பலூர் மாவட்டத்தில் பொங்கல் பண்டிகைக்கு அலங்கரிக்கத் தேவையான மஞ்சள் பயிர்கள் ஜனவரியில் அறுவடைக்காக தளதளவென வளர்ந்துத் தயார்நிலையில் உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு தித்திக்கும் செங்கரும்பு எந்த அளவுக்கு முக்கியத் துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறதோ, அதேபோல் பொங்கல் வைக்கும் இடங்களிலும், வீடுகளிலும், திருமணமான பெண்ணின் வீட்டார் மாப்பிள்ளை வீட்டுக்கு சீர்கொண்டு செல்லும் வாகனங்களிலும் மங்களகரமாக மஞ்சள் பயிரைத்தான் தோரணமாகக் கட்டித்தொங்க விடுவது வழக்கம்.பணப்பயிர்களில் ஒன்றான மஞ்சள்பயிர் அறுவடைக்குப் பின்னர், அவித்து பதப்படுத்தப்ப ட்டு, அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பதற்கு, உணவுப்பொருள் தயாரிப்பதற்கு விற்பனை செய்வதற்காக, ஈரோடு நாமக்கல் என வெளிமாவட்டச் சந்தைகளுக்கு விற்பனைக்காக ஏற்றுமதி செய்யப்பட்டாலும், அதற்குரிய விலைகிடைக்காத காரணத்தால், பாதிக்கப்படும் விவசாயிகள் பெரும்பாலும் மஞ்சள் பயிரை பொங்கலுக்கு தோரணம் கட்ட ஏதுவாக, வெறுமனே தோகையோடு விற்றால்கூட முதலுக்கு மோசமின்றி வருமானம் பார்க்கலாம் என நினைத்து, குறிப்பாக ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யும் விதமாகவே பயிரிட்டு வருகின்றனர்.
இதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் மலையாள பட்டி, கொட்டாரக்குன்று, பூமிதானம், வெட்டுவால் மேடு, அரசலூர், அன்னமங்கலம், விசுவக்குடி, தொண்டமாந்துறை, வெங்கலம், பாண்டகப்பாடி, களரம்பட்டி, சத்திரமனை, சோமன்டாபுதூர், எசனை, ஆலம்பாடி,அனுக்கூர், ஒகளூர், வயலப்பாடி, குரும்பலூர், ஈச்சம்பட்டி, மேட்டங்காடு, செங்குணம், அருமடல், சிறுகுடல், கீழப்புலியூர், சித்தளி, பேரளி, கோரையாறு, இரட்டைமலை சந்து, மேலப் புலியூர், லாடபுரம், சரவணபுரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில், 20ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பரவலாக சாகுபடி செய்யப் பட்டு வரும் மஞ்சள்பயிர் தற்போது பொங்கல் சீசனுக்காக குறிப்பிடத்தக்க அளவில் சாகு படி செய்யப்பட்டு ஜனவரியில் அறுவடைக்கு ஏற்றபடி தளதளவென வளர்ந்துத் தயார் நிலையில் உள்ளது.
